மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கட்டடம் மிகப்பெரிய பரப்பளவில் அமைந்துள்ள நிலையில் கட்டடத்தை சுற்றி பொதுமக்கள் அமர்ந்து செல்வதற்கு வசதியாக மரங்களுடன் கூடிய பூங்கா இருந்தது. தற்போது இது பராமரிப்பின்றி புதர்மண்டி கிடக்கிறது.
இதனால், கொடிய விஷம் உள்ள பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதாகவும் இதனால் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் தாங்கள் உயிர் அச்சத்துடன் வருவதாகவும், கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் நேரத்தில் ஏதேனும் விஷ ஜந்துக்களால் கடிப்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற பீதியுடன் வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதுகுறித்து கண்டுகொள்ளாத கோட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் கோட்டாட்சியர் அலுவலகத்தை பராமரிக்காமல் அலட்சியப் போக்கில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் அலுவலகத்தின் வாசல் முன்புறமுள்ள பகுதியில் 6 அடி நீளமுள்ள மிகப்பெரிய பாம்பு ஒன்று மரத்தில் ஏறிக்கொண்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஊழியர்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு தகவல் அளித்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த தீயணைப்பு துறை வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி மரத்தின் மேலாக இருந்த பாம்பை லாவகமாக பிடித்தனர். தொடர்ந்து அந்த பாம்பை வனத்துறையிடம் ஒப்படைத்து பாதுகாப்பான வனப்பகுதியில் கொண்டு விட அனுப்பி வைத்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் அமர்வதற்காக கோட்டாட்சியர் அலுவலக வாயில் முன்பு இருக்கைகள் அமைக்கப்பட்டு பூங்கா பல ஆண்டுகளுக்கு முன்பு பராமரிக்க பட்டு வந்தது. ஆனால் அது காலப்போக்கில் அங்கு பணி புரியும் அதிகாரிகளின் அலட்சியத்தால் முறையாக பராமரிக்கப்படாமல் தற்போது புதர்கள் மண்டி விஷ ஜந்துக்களின் வசிப்பிடமாக மாறியுள்ளது. இதனால் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் அவ்வழியாக வர வேண்டிய சூழலும், அந்த புதர்களுக்கு அருகிலேயே காத்திருக்கும் நிலையும் நிலவி வருகிறது. இதனால் அங்கு வரும் பொதுமக்களுக்கு பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் கடித்து உயிரிழப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறும் முன்பு துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக புதர்மண்டிய பகுதிகளை சீரமைத்து பொதுமக்கள் அமரும் வகையில் சிமெண்ட் பெஞ்சுகள் உடன் கூடிய பூங்காவாக மீண்டும் இதனை மாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஊராட்சி ஒன்றியத்தில் மோசடி: ஆணையர், பொறியாளர்கள் உள்பட 7 பேர் சஸ்பெண்ட்!