பொன்னியின் செல்வன் ‘பாகுபலி’ படம் போன்று இருக்குமா என்பதற்கு அந்தப்படத்தின்இயக்குநர் மணிரத்னம் பதிலளித்துள்”ளார்.
இது குறித்து மணிரத்னம் பேசும் போது, “கல்கி அவர்களுக்கு என்னுடைய முதல் நன்றி. செக்க சிவந்த வானம் படம் முடிந்த பிறகு, லைகா சுபாகஸ்கரன் அடுத்ததா என்ன படம் செய்ய போகிறீர்கள் என்று கேட்டார். உடனே நான் பொன்னியின் செல்வன் எடுக்க வேண்டும் என்று ஆசை என்று சொன்னேன். 2 நிமிடம் யோசித்த அவர் சரி செய்வோம் என்றார். 2 நிமிடம்தான் ஆனது 70 வருட கனவை நிறைவேறுவதற்கு. உடனே அவர் என்ன இது பாகுபலி மாதிரி இருக்குமா.. என்றார்..
உடனே நான் நிச்சயம் அப்படி இருக்காது... பாகம் 1 மற்றும் 2 வேண்டுமென்றால் அதே போல இருக்கும். சரி.. சஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவதி படம் மாதிரி இருக்குமா.. என்றார். அப்படியும் இருக்காது.. என்றேன். பின்னர் எப்படி இருக்கும் என்றார்.. இது கல்கி எழுதின மாதிரி இருக்கும்னு என்றேன். முடிந்த வரை அதைத்தான் முயற்சி செய்திருக்கிறோம்.” என்று பேசினார்.
கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதனிடையே பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் பங்கேற்றனர்.
மேலும் நிகழ்ச்சியில் படத்தில் இடம் பெற்ற நடிகர்,நடிகைகள் தவிர்ந்து நடிகர்கள் நாசர், காளிதாஸ் ஜெயராம், சித்தார்த்,நிழல்கள் ரவி, இயக்குநர் மிஷ்கின், நடிகை பூர்ணிமா பாக்யராஜ், அதிதி ராவ், உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.