தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பொருட்செலவில் , அதீத எதிர்பார்ப்பிற்கு மத்தியில் தயாராகி வரும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’ . எழுத்தாளர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ என்ற  நாவலை தழுவியே இந்த படம் தயாராகி வருகிறது. பொன்னியின் செல்வன் படத்தை படமாக்க பல இயக்குநர்கள் போட்டி வந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு , தான் இந்த பிரம்மாண்ட சப்ஜெக்ட்டை கையில் எடுத்துவிட்டதாகவும் , இந்த கதையை படமாக்க வேண்டும் என்பது தன்னுடைய பெருங்கனவு என்றும் இயக்குநர் மணி்ரத்தினம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் படத்தில் கார்த்தி, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, விக்ரம், பார்த்திபன் , த்ரிஷா உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய , திரைக்கதைக்கு மணிரத்தினத்துடன் இணைந்து குமாரவேல் உதவியுள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து படத்தை தயாரிக்கின்றனர்.




பொன்னியின் செல்வன் கதையின் கதாபாத்திரங்களின் தேர்வு குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியின் அதிகரித்துள்ளது. முன்னதாக  ஆதித்த கரிகாலனாக நடிகர் விக்ரமும், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும் , குந்தவையாக திரிஷாவும், நந்தினி தேவியாக ஐஸ்வர்யா ராயும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் , தற்போது மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.  அதன்படி பெரிய பழுவேட்டையராக சரத்குமாரும், சின்னப் பழுவேட்டையராக பார்த்திபனும் , சுந்தர சோழனாக பிரகாஷ்ராஜும்,ஆழ்வார்க்கடியனாக நடிகர் ஜெயராமும் நடிக்கை ஒப்பந்தமாகியுள்ளனர். படத்தில் நடிக்கும்  கதாபாத்திரங்களின் கற்பனை ஓவிய வடிவமைப்பை  ஆனந்த விகடன் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றன.






















முன்னதாக படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை கலக்கின. படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். வருகிற 2022 ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன்  திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது ரசிகர்களுக்கு நிச்சயம் மிகப்பெரிய ட்ரீட்டாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. படம் குறித்த சில  அப்டேட்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.