'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் கிராமத்து இளைஞர்களின் இயல்பான நகர்வை நகைச்சுவை வடிவில் கொடுத்திருப்பார் இயக்குநர் பொன்ராம். கலாச்சாரம், பண்பாடுகளை தனது படங்களில் ஆங்காங்கே சம்மங்கி மலர்கள் போல தொகுத்திருப்பார். இந்நிலையில் நடிப்பு திறமை உள்ள இளைஞர்கள் மீசை வளர்க்க வேண்டும், அவர்களுக்கு சினிமாவில் அதிக வாய்ப்பு உள்ளது என பேசியுள்ளார்.



மதுரை பொன்மேனி பகுதியில் உள்ள தமிழ்நாடு சினிமா நடிகர்கள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பொன்ராம் கலந்து கொண்டு பேசுகையில்...," தமிழ் சினிமாவில் மீசை வளர்த்த ஆண்களுக்கும், தண்டட்டி  அணிந்த பெண்களுக்கு அதிகமான வாய்ப்புகள்  உள்ளது. எனவே வரும் காலங்களில் நடிப்பு திறமை உள்ள இளைஞர்கள் மீசை வளர்த்தால்  அவர்களுக்கு திரைப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்த விழாவில் பங்கேற்றுள்ள நபர்கள் என்னுடன் பல்வேறு படங்களில் வேலை செய்துள்ளனர். அவர்கள் முகங்களை மீண்டும் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. வரும் காலங்களில் நிச்சயம் நமது மண்ணின் பெருமையை தாங்கும் வகையில் என்னுடைய படங்களில் இருக்கும்” என்றார்.



 

மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மதுரை மாநகர் உதவி ஆணையாளர் ஜஸ்டின் பிரபாகரன் கலந்துகொண்டு பேசுகையில்....," காவல்துறையினரின் பணிகளை சினிமா துறை பல நேரங்களில் எளிமையாக்கு கின்றன. நாங்கள் மக்களிடம் சொல்ல வேண்டிய கருத்துக்களை அவர்களுக்கு புரியும்படி சொல்லப்படுகிறது. படங்களில் குற்றச்சம்பவங்கள் குறித்து எடுக்கப்படும் போது, சிலர் தவறுகளை கைவிடுகின்றனர். சிலர் இதைப்போல் மாட்டிக் கொள்ளக்கூடாது என திட்டமிடுகின்றனர். அதை எப்படி அணுகிறோம் என்பதை பொருத்து மாறுகிறது. ஒரு படத்தில் வடிவேலுவை திருடர் குல திலகமாக காண்பித்து அடிவாங்க வைப்பது போன்ற காட்சி, நகைசுவையுடன் சமூக கருத்தை வெளிக்கொண்டு வருகிறது. சினிமாவை போல், சின்னத்திரை, வானொலி, தொலைக்காட்சி செய்தி, வெப் செய்திகள் கம்யூனிகேஷனுக்கு உதவுகிறது.



மதுரையில் ஒரு சாலை அடைபட்டுள்ளதை கூட 'அந்த பக்கம் செல்ல வேண்டாம்' என்று   வானொலியில் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். அந்த அளவுக்கு கம்யூனிகேஷன் மக்களுக்கு உதவுகிறது. நாங்க செய்ய வேண்டிய பணியை ஊடகங்கள் எடுத்து செய்கின்றன.  தற்கொலை எண்ணங்களை தடுக்கும் வகையில் இயக்குநர் பொன்ராம் இளைஞர்களுக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை படத்தை ஜாலியாக எடுத்தார். அதில் மக்களாகிய நாம் நல்ல கருத்துகள் அனைத்தையும் முழுமையாக எடுத்துக்கொள்ள வேண்டும். மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் சார் காவல்துறைக்கு பல்வேறு ஒத்துழைப்பையும், உதவிகளையும் செய்துள்ளார். ஒவ்வொரு விழிப்புணர்வு நிகழ்விற்கும் தானாக முன் வந்து அவர் உதவியது அலப்பறியது. வாழ்க்கையில் எதையும் டேக் இட் ஈசியாக எடுத்துக் கொள்ளவேண்டும். சினிமாவில் அன்பு, பாசம், கலாச்சாரம் என நல்லா விசயங்களை கற்றுக் கொடுத்திருக்கிறது. சில திரைப்படங்களில் தவறான கருத்து வருவது அது, இயக்குநரை பொருத்தது. அதற்குள் செல்ல தேவையில்லை. நல்லதை மட்டும் எடுத்துக்கொள்வோம். எனக்கெல்லாம் முடி நிறையா வளர்க்க வேண்டும் என ஆசை. ஆனால் என்னால் வளர்க்க முடியாது. என்னுடைய துறைக்கு செட்டாகாது. இப்படி ஒவ்வொரு துறையினருக்கும் தங்கள் துறைக்கு ஏற்றார் போல் செயல்படும்போது வெற்றியை கொடுக்கும்" என்றார்.