பொன்னியின் செல்வன்- கடந்த காலங்களில் வாசிப்பாளர்களின் விருப்பமான வார்த்தை. ஆண்டுகள் கடந்தும் அதிகம் விற்பனை ஆகும் நாவல். இப்போது குழந்தைகள், 2கே கிட்ஸ் என எல்லோரின் உதடுகளிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது பொன்னியின் செல்வன். இந்தப் படத்தின் பாடல்கள் அதிரிபுதிரி ஹிட் அடித்த நிலையில், படத்தில் 12 பாடல்களை எழுதிய கவிஞர் இளங்கோ கிருஷ்ணனைச் சந்தித்துப் பேசினோம். 


எம்ஜிஆர் காலத்தில் இருந்து ரஜினி, கமல் எனப் பலர் முயற்சித்து கைவிட்ட படம், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் என இரண்டு ஆளுமைகளின் கூட்டணி. உங்களுக்கு முதல் படம் வேறு. பாட்டு எழுத வேண்டும் என்று அழைத்தபோது, பாறாங்கல்லைத் தலையில் தூக்கி சுமக்கக் கொடுத்ததுபோல் இருந்ததா? இலகுவாய் எழுதிவிடலாம் என்று நம்பிக்கை இருந்ததா?


நிச்சயமாக இல்லை. அப்படி எளிதாய் எழுதிவிடவும் முடியாது. நீங்கள் சொன்னதுபோல, பொன்னியின் செல்வன் தமிழ் சினிமாவின் ஏக்கங்களில் ஒன்று. எப்படியாவது அதைப் படமாக எடுத்துவிட வேண்டும் என்று பலர் நீண்ட காலமாக முயற்சித்தனர். மணி சாரும் 3 முறை முயற்சித்து, 3ஆவது முறைதான் படமாக எடுக்க முடிந்தது. இது அவரின் கனவுப் படம். தமிழ்த் திரை உலகின் கனவுப் படம். 


சர்வதேச ஜாம்பவான்கள் கூட்டணியில் பாட்டெழுதுவது சாதாரண காரியமில்லை. எனக்கு இருந்த ஒரே நம்பிக்கை, படத்தின் கதை. 8ஆம் வகுப்பு படிக்கும்போது முதல் முறையாகப் படித்ததில் இருந்து, தொடர்ந்து ஆண்டு விடுமுறைகளில், கல்லூரிக் காலத்தில், வேலைக்குச் சென்ற பிறகு என்று பலமுறை படித்திருக்கிறேன். படத்துக்குப் பாட்டெழுதுவதற்காக மீண்டும் 2 முறை வாசித்தேன். கதை, கதாபாத்திரங்களின் இயல்புகள் எனக்கு நன்றாகத் தெரியும். அதுதான் என்னால் பாட்டெழுதிவிட முடியும் என்ற நம்பிக்கையை எனக்கே அளித்தது. 




நீங்கள் இதற்கு முன்பு திரைப்படங்களுக்கு பாடல் எழுதியதில்லை என்ற சூழலில், எதை அடிப்படையாக வைத்து மாபெரும் சரித்திரப் படமொன்றுக்கு மணிரத்னம் பாட்டெழுத அழைத்தார்?


பழந்தமிழ் இலக்கியத்தில் பரிச்சயமும் நவீன இலக்கியங்களில் ஆளுமையும் கொண்ட ஒருவரை மணி சார் தேடினார். இது இரண்டும் இணைந்த நபர் கிடைப்பது கடினமான காரியம். நவீன இலக்கியங்களில் காத்திரத்துடன் இயங்கி வருபவர்கள், மரபு இலக்கியத்தைப் பொருட்படுத்த மாட்டார்கள். புதுமைப் பித்தன், பாரதிக்குப் பிறகுதான் அவர்கள் படிக்கத் தொடங்குவார்கள். 


அதேபோல மரபு வாசிப்பவர்கள் பாரதியைக் கடந்து வரமாட்டார்கள். இந்த இரண்டு பெரிய எல்லைகள், 90 ஆண்டுகளாகவே தமிழ் வெளியில் இருக்கின்றன. ஆனால் பொன்னியின் செல்வன் படத்துக்குப் பாட்டெழுத இரண்டுமே தேவைப்பட்டது. எழுத்தாளர் ஜெயமோகன் என் பேரைச் சொல்லி இருக்கிறார். மணி சார் என்னுடைய யூடியூப் பேச்சுகள் பலவற்றைப் பார்த்து, சமூக வலைதளக் கணக்குகளை கவனித்து நான் எழுதினால் நன்றாக இருக்கும் என்று யோசித்து, என்னை அழைத்தார். அப்படித்தான் இது நிகழ்ந்தது. 


முதல் முறையாக பாட்டெழுதுகிறீர்கள்.. ஆங்கிலம் அதிகம் புழங்கும் புத்தாயிர காலகட்டத்தில், பழந்தமிழ் சரித்திரப் பாடல்களை எழுதுவதில் என்னென்ன சவால்கள் இருந்தன?


முழுக்க முழுக்கத் தமிழில் பாடல் இருக்க வேண்டும் என்பது என்னுடைய காதலில் ஒன்று. ஏற்கெனவே வந்த பாடல்களை, எனக்குள்ளேயே அப்படித்தான் பாடிக் கொண்டிருப்பேன். நம்முடையது வளமான சொல் அகராதி. சுமார் 3 லட்சம் சொற்கள் தமிழில் இருக்கின்றன. ஆனால் தினந்தோறும் 1000 வார்த்தைகளுக்குள்தான் பேசிக் கொண்டிருக்கிறோம். 


பாடல்கள் எளிமையாக இருக்க வேண்டும், மக்களுக்குப் புரியவேண்டும் என்று யோசித்து, ஆரம்பத்தில் இருந்தே அதை நோக்கி தமிழ் சினிமா நகர்ந்தது. அன்றாடங்களுக்குள் பேசப்படும் வார்த்தைகளில் பாட்டெழுதி, இப்போது அன்றாடம் பேசும் ஆங்கில வார்த்தைகளைக் கொண்டதாய், தமிழ் சினிமா பாடல்கள் மாறிவிட்டன. இந்தப் போக்கு மாற வேண்டும், பாட்டிலாவது நல்ல தமிழைப் பயன்படுத்த வேண்டும். வாசகர்கள் சற்றே மெனக்கிட்டு, பாடல் வரிக்கான அர்த்தத்தைத் தேட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். 




வரலாற்றுப் புனைவு படம் என்பதால் நல்ல தமிழில் பாட்டு என்பது சாத்தியமாகி இருக்கிறது. இது அன்றாடப் படங்களில் எப்படி சாத்தியப்படும்?


நிச்சயமாக சாத்தியமில்லை. ஆனால், பிடிவாதமாக நல்ல தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். 


திரைப் பாடல்களில் ஆங்கில வரிகளே அதிகம் பயன்படுத்தப்படும் போக்கு எங்கு போய் நிற்கும்?


மொழி சிதைவுக்கு வித்திடும். உங்களின் பண்பாடு சிதைந்துவிடும். மலருக்கு 7 வகைப் பருவங்கள் இருக்கின்றன. அதேபோல பெண்ணுக்கு 7 வகை பருவங்கள் இருக்கின்றன. 'பசு கதறும்' என்றுதான் சொல்ல வேண்டும். இப்படி இயற்கை சார்ந்த மரபை, அந்த நுட்பத்தை இழந்து விடுவோம்.  


பொன்னியின் செல்வன் பாடல்கள் பலத்த வரவேற்பைப் பெற்றன.. ஆனாலும் இளைய தலைமுறையினர், பாடல் வரிகள் புரியவில்லை என்று சொல்வதைப் பார்க்க முடிகிறது. இதை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்?


அவர்களுக்கு நிச்சயம் புரியாது. ஆனால் அதை அப்படியே கடந்துவிடக் கூடாது. 'ஒய் திஸ் கொலவெறி' என்னும் பாட்டு புரியாமல் இருக்காது. ஆனால் அதில் புரிய என்ன இருக்கிறது? புரிய மெனக்கிடுங்கள் என்கிறேன்.  


இளம் தலைமுறைக்குப் பிடித்த, தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணிபுரிந்த அனுபவம் பற்றிச் சொல்லுங்கள். மெட்டுக்குப் பாட்டு எழுதினீர்களா? பாடல் வரிகளுக்கு அவர் இசை அமைத்தாரா?


'தேவராளன் பாட்டு' மட்டுமே எழுதிய பிறகு இசையமைக்கப்பட்டது. பிற பாடல்கள் அனைத்துமே மெட்டுக்கு எழுதியதுதான். ஏ.ஆர்.ரஹ்மானைப் பொறுத்தவரை, நம்மை மனம் திறந்து பாராட்டுவார். நிறைய உற்சாகப்படுத்துவார். அவ்வளவு பெரிய ஆளுமை நம்மைப் பாராட்ட வேண்டிய அவசியமில்லை. பாராட்டினால் நாம் ஊக்கமடைவோம் என்று தெரிந்து, பாராட்டிக்கொண்டே இருப்பார். ஒரு பாட்டை எப்படி எடுத்துச் செல்ல வேண்டும் என்று அவரிடம் கற்றுக்கொண்டேன். 


பொன்னியின் செல்வன் பாடல்களை எழுதும் முன் என்னென்ன புத்தகங்களைப் படித்தீர்கள்? என்னென்ன இலக்கிய வகைகளை பாடல்களில் பயன்படுத்தி இருக்கிறீர்கள்?


கலிங்கத்துப் பரணி, குறுந்தொகை, ஐங்குறுநூறு, சோழர்களின் வரலாறு ஆகிய நூல்களை முழுமையாகப் படித்தேன். புறநானூற்றை மீண்டும் வாசித்தேன். 


படத்தில் ஒவ்வொரு பாட்டுக்கும் ஒவ்வொரு விதமான அழகியல்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. 'பொன்னி நதி பாக்கணுமே' பாட்டில் வரும் 'நீர் சத்தம் கேட்டதுமே நெல் பூத்து நிற்கும்' வரி, கம்ப ராமாயணத்தில் இருந்து எடுத்தாளப்பட்டது. 'ஈழ மின்னல்' சொற்கள் - குற்றாலக் குறவஞ்சியில் இருந்தும் தேவராளன் ஆட்டம் பாடல் - திருப்புகழில் இருந்தும் எடுத்தாளப்பட்டது. சோழா சோழா பாடல் - கலிங்கத்துப் பரணி போர்க்கள அழகியலில் இருந்து எடுக்கப்பட்டது. 'மன்னித்தோம், அடி வீழ்ந்த பகைவரை' வரிகளை புறநானூற்றில் இருந்து எடுத்தோம்.





இயக்குநர் மணிரத்னம் திரையிலும் நிஜத்திலும் அதிகம் பேச மாட்டார் என்பார்கள். எப்படி உங்களிடம் வேலை வாங்கினார்? 


மணி சார் கோபமே பட மாட்டார். ஒரு பட்டாம்பூச்சி பூவில் தேனெடுப்பதுபோல பிரமாதமாக வேலை வாங்குவார். 'நோ' சொல்லவே மாட்டார். 'நல்லா இருக்கு, ஆனா இதை இப்படி ட்ரை பண்ணலாமா?' என்று கேட்பார். 


ஷூட்டிங் சென்றீர்களா? ஏதேனும் மறக்க முடியாத அனுபவம்? 


லாக் டவுன் காலகட்டம் அது. நடிகர்களைத் தவிர அனைவருமே முழுக் கவச உடை அணிந்துகொண்டு நடித்தார்கள். அதனால் படப்பிடிப்புக்குச் செல்லவில்லை. 


நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத் குமார் பார்த்திபன் யாரேனும் படப் பாடல்களைப் பற்றி பேசினார்களா?


இல்லை, அவர்கள் எதுவும் என்னிடம் பேசவில்லை. 


கவிஞர், எழுத்தாளர், ஊடகவியலாளர், பாடல் ஆசிரியர்.. இதில் எந்த உங்களை மிகவும் பிடித்திருக்கிறது? எப்படி அடையாளம் காணப்பட விரும்புகிறீர்கள்?


30-க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி இருந்தாலும், ஷேக்ஸ்பியர் கவிஞர் என்றே அறியப்பட விரும்பினார். அதுபோல நானும் கவிஞனாகவே அடையாளம் காணப்பட ஆசை. வரலாறு, தத்துவம் சார்ந்து எனக்கு ஆர்வம் அதிகம். நாவல்கள், கட்டுரை, உரைநடைகள் எழுதி இருக்கிறேன். ஆனாலும் கவி உலகம் எனக்குப் பிடித்தமானது. 


இவ்வளவு நாட்களாக இலக்கிய வெளிக்குள் மட்டுமே அறியப்பட்ட முகமாக இருந்த நீங்கள், இன்று ஒற்றைத் திரைப்படத்தின் மூலம் உலகம் அறிந்த முகமாக மாறி இருக்கிறீர்கள். இந்த மாற்றம் எப்படி இருக்கிறது?


நன்றாக இருக்கிறது. தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரை சினிமாதான் எல்லாமே. ஓவியனாக இருந்தாலும் கவிஞனாக இருந்தாலும் இசைக் கலைஞனாக இருந்தாலும், சினிமாவுக்குள் இருந்தால்தான் எல்லோரும் அறிந்த முகமாக இருப்பீர்கள். சினிமாவுக்குள் வரும்வரை உங்களை யாருக்கும் தெரியாது. சொல்லப் போனால் உங்கள் வீட்டில்கூட உங்களை மதிக்க மாட்டார்கள். அதுதான் நிதர்சனம். 


பாடலுக்குக் கிடைக்கும் மரியாதை என்பது சினிமாவுக்குக் கிடைக்கும் மரியாதை. அது எனக்குக் கிடைக்கும் மரியாதை அல்ல. 




அடுத்தடுத்து என்ன படங்களுக்கு பாடல் எழுதி இருக்கிறீர்கள்? 


ஆதிபுருஷ் படத்துக்கு, தமிழில் பாடல்கள் எழுதி இருக்கிறேன். இயக்குநர் லிங்குசாமி உள்ளிட்ட சில இயக்குநர் அழைத்துப் பேசி வருகின்றனர். படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தபிறகு சொல்கிறேன். 


பொன்னியின் செல்வன் நாவலில் கல்கி, நந்தினியின் கதாபாத்திரம் முழுமை அடைவதாய்க் காட்டி இருக்க மாட்டார். பொன்னியின் செல்வன் 3ஆம் பாகத்தை நந்தினி கதாபாத்திரத்தை வைத்து எடுக்க வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா கூட இசை வெளியீட்டு விழாவில் சொல்லி இருந்தார். அதனால்.. பிஎஸ் - 3 வர வாய்ப்புண்டா?


அது பெரியவர்கள் முடிவெடுக்க வேண்டிய ஒன்று. அதுகுறித்த விவாதமும் நடந்துகொண்டிருக்கிறது. அடிப்படையில் அதைச் செய்ய முடியும். நந்தினி, குந்தவை உட்பட நாவலின் ஒவ்வொரு கதாபாத்திரமும், அது வெளியே நகரும் சுதந்திரத்தைக் கல்கி கொடுத்திருக்கிறார். பொன்னியின் செல்வனைக் கொண்டு பல படங்களை எடுக்க முடியும். எதிர்காலத்தில் இது நடக்கும் என்று நினைக்கிறேன். 


இவ்வாறு பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் தெரிவித்தார்.