கரூர் மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்வதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.




தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து 107 டிகிரி பாரன்ஹீட் மேல் பதிவாகி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மாவட்டத்தில் கடந்த நான்கு தினங்களாக மாலை நேரத்தில் மிதமான மழை பெய்து வந்தது. இந்த நிலையில் இன்று மாலை காற்றுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியதால், பணி முடிந்து வீடு திரும்பும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தொடர் மழையின் காரணமாக வெப்பம் விலகி வீடுகளில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.




கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம், காந்திகிராமம், ராயனூர், தாந்தோணிமலை ஆகிய பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அதே போன்று சுற்றுவட்டார பகுதிகளான வெள்ளியணை, புலியூர், மாயனூர், உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிதமானது முதல் கனமழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தரகம்பட்டி பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை மற்றும் பலத்த சூறாவளி காற்றின் காரணமாக 20 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை, வெற்றிலை, முருங்கை தோட்டங்கள் முழுவதும் நாசம். வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்யவரவில்லை. அரசு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை.


கரூர் மாவட்டம், தரகம்பட்டி பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக இரவில்  பலத்த சூறாவளி காற்று, இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வந்துள்ளது.


கனமழை மற்றும் பலத்த சூறாவளி காற்றினால் தரகம்பட்டி மேலப்பகுதி, கீழப்பகுதி, மைலம்பட்டி சுற்றியுள்ள கிராம பகுதிகளில் சுமார் 20 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் மற்றும் வெற்றிலை, முருங்கை முழுவதும் முறிந்து சாய்ந்து நாசமாகின. காற்றில் முறிந்து அடியோடு சாய்ந்து உள்ள வெற்றிலை மற்றும் வாழை மரங்களை விவசாயிகள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.


வாழை மரங்கள் மற்றும் வெற்றிலை பயிர்கள் முழுவதுமாக அழிந்த காரணத்தினால் அதனை வேளாண் அதிகாரிகள் கணக்கிட்டு உரிய நஷ்ட ஈடு வழங்க தமிழக அரசு முன் வர வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




மேலும் வருடம் முழுவதும்  பல ஆயிரம் செலவு செய்து காத்து வந்த வாழை மரங்கள் மற்றும் வெற்றிலை பயிர்கள் பலத்த சூறாவளி காற்றால் ஒரே நாளில் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளதால் செய்வதறியாது விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.


வாழை, வெற்றிலை, முருங்கை பாதிக்கப்பட்டு இரண்டு நாட்கள் ஆகியும் வேளாண்துறை அதிகாரிகள் இதுவரை அப்பகுதியில் ஆய்வு செய்யவில்லை என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.