மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான "பொன்னியின் செல்வன்" திரைப்படம் ஹிந்தி பாக்ஸ் ஆபிஸ் அமோகமான வரவேற்பை பெற தொடங்கியுள்ளது. தமிழ் திரைப்படம் தென்னிந்தியாவில் வசூலை ஈட்டி கொண்டு இருக்கும் அதே வேளையில் ஹிந்தி டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட ஹிந்தி வெர்ஷனும் வசூலை வாரி குவித்து வருகிறது என்பது ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி.


 



பாலிவுட்டை கலக்கி வரும் பொன்னியின் செல்வன் :  


செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியான "பொன்னியின் செல்வன்" திரைப்படம் பாலிவுட்டில் முதல் நாள் சுமார் 2 கோடியை வசூல் செய்து இரண்டாம் நாள் முடிவில் சுமார் 4.35 கோடியையும் வசூலித்தது. அந்த வகையில் மூன்றாம் நாளான நேற்று முதல் இரண்டு நாட்களை விடவும் இரண்டு மடங்கு அதிகரித்து சுமார் 8 கோடி வசூலை செய்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று விடுமுறை நாள் என்பதால் வசூல் இரு மடங்காக உயர்ந்துள்ளது. ஒரு டப்பிங் திரைப்படத்திற்கு இத்தனை கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது  என்பது ஒரு மிக பெரிய வெற்றியை குறிக்கிறது. இந்திய அளவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் "பொன்னியின் செல்வன்" திரைப்படத்திற்கு ஒரு பிரமாண்டமான ஓப்பனிங் கிடைத்துள்ளது. 


 






 
அமரர் கல்கி எழுதிய "பொன்னியின் செல்வன்" நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் படமாக்கிய இந்த சரித்திர காவியத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, பிரபு, லால், ஜெயசித்ரா, நாசர் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.   மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்துக்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 


பொன்னியின் செல்வன் படத்தில் அனைத்து கேரக்டர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே சமயம் புத்தகம் படிக்காதவர்களுக்கு கூட கதை புரியும்படி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது படத்தின் சிறப்பம்சம் என விமர்சனம் பெற்று வருகிறது பொன்னியின் செல்வன் திரைப்படம். 


 






 


படம் திரையரங்கில் வெளியாகி மூன்றாம் நாள் முடிவில் சுமார் 230 கோடி உலகளவில் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது வரையில் எந்த ஒரு தமிழ் சினிமாவிற்கும் இப்படி ஒரு ஓப்பனிங் கிடைத்ததில்லை. மேலும் அக்டோபர் 5ம் தேதி வரையில் விடுமுறை நாட்கள் என்பதால் மேலும் வசூல் அமோகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.