பிரெஞ்சு திரைப்பட இயக்குனர் கோதார் தனது 91 வயதில் மரணிக்கும் வரை படங்களை இயக்கி வந்தார்..தற்போது மார்ட்டின் ஸ்கார்சிஸ் தனது 80 வயதில் இயக்கியிருக்கும் படம் சர்வதேச கான் திரைப்பட விழாவில் பாராட்டுக்களை குவித்தது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை படமாக எடுக்கவிருக்கிறாராம். ஏன் தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிட்ட வயதிற்குமேல் நடிகர்கள் மட்டுமில்லை இயக்குநர்களும் கூட மறைந்துவிடுகிறார்கள் என யோசித்து பார்த்திருக்கிறீர்களா?
சினிமாவின் மேல் தீராத காதல் கொண்டிருந்த இயக்குநர் பாலுமகேந்திரா தனது இறுதிகாலத்தில் தனக்கு பிடித்த மாதிரி வெறும் இரண்டு படங்களை மட்டுமே தன்னால் எடுக்க முடிந்ததாக தொடர்ந்து சொல்லிவந்தார். இயக்குனர் மகேந்திரன் தனது இறுதிகாலங்களில் சொல்லிக்கொள்ளும்படி எந்த படமும் எடுக்கவில்லை. இயக்குநர் பாரதிராஜா தற்போது மாடர்ன் லவ் சீரிஸில் ஒரு படம் எடுத்திருக்கிறார்.
மணிரத்னம்
கலைஞர்கள் எத்தனை நல்ல படைப்புகளை எடுத்தாலும் எல்லா காலத்திலும் ஏற்புடையவர்களாக இருப்பது கடினம். அந்த வகையில் எல்லா காலத்து ரசிகர்களுக்கும் முக்கியமான இயக்குனராக இருந்து வருபவர் மணிரத்னம். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி அழகியலை திரைப்படங்களில் உருவாக்கியவர் மனிரத்னம். இந்தியத் திரைப்படங்களின் மிகப்பெரிய அங்கமான பாடல்கள், நாடகீய காட்சிகளை பண்பாட்டு நீட்சியாக கடத்தி வருபவர் . மணிரத்னத்தை ஒரு க்ளாசிக் இயக்குநர் என்று ஏன் சொல்கிறார்கள், எதன் காரணத்தினால் மற்ற இயக்குனர்களிடமிருந்து அவர் வேறுபடுகிறார் என்பதற்கு சில உதாரணங்கள்
கதைச்சூழல்
மணிரத்னம் எடுக்கும் ஒவ்வொரு காட்சிகளும் ஏன் இந்த அளவிற்கு பாராட்டப்படுகின்றன என்றால் கதைகளில் சூழலுக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம். எந்தப் படத்திலும் காரணமில்லாமல் அல்லது ஆடம்பரத்திற்காக ஒரு லோகேஷனைத் தேர்வு செய்ததில்லை மணிரத்னம்.
வசனங்கள்
இன்று ஒருவர் சற்று குரலைத் தாழ்த்திப் பேசினால் என்ன மணிரத்னம் கேரக்டர் மாதிரி பேச ட்ரை பன்றியா? என்று நம்மை கேட்கும் அளவிற்கு மணிரத்னத்தின் வசனங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடம் தாக்கம் ஏற்படுத்தி இருக்கிறது. மனிதர்கள் உணர்ச்சிவசப்படும் போது மிக சத்தமாக உரத்து பேசுவது தானே வழக்கம் ஆனால் ஏன் கடும் துயரத்தில் அல்லது கோபத்தில் இருக்கும்போது மணிரத்னத்தின் கதாபாத்திரங்கள் குரலை தாழ்த்தி பேசுகிறார்கள். இந்த கதாபாத்திரங்கள் தங்களது உணர்வுகளை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்கள். உடைந்து சிதறிவிடக்கூடாது என்பதற்காக தங்களது குரலை தாழ்த்திக்கொள்கிறார்கள் . இந்த அழகியல் கூறினை மணிரத்னத்தின் பல படங்களில் நாம் காணலாம்.
பாடல் காட்சிகள்
மற்ற மொழிப் படங்களைக் காட்டிலும் இந்திய சினிமாவிற்கு பெரிய சாதகமான அதே நேரத்தில் பாதகமான ஒரு அம்சம் என்றால் பாடல்தான். சாதகமான அம்சத்தை மட்டும் இங்கு பேசலாம். ஒரு கதையின் உணர்வை கவித்துவமான நடையில் சொல்வதற்கு பாடல்களை சரியாக பயன்படுத்துவது அவசியம். அதனை மிகச் சரியான வகையில் செய்தவர் மனிரத்னம். கவித்துவம் என்பது எந்த ஒரு கலை வடிவத்திற்கும் மிக அவசியமானது. திரைப்படங்களில் கவித்துவத்தை உருவாக்கியவர் மனிரத்னம்.
இன்று தனது 67 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் மனிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தான் ஒரு முன்னோடி என்பதை நிரூபித்துள்ளார். அவர் மேலும் நிறையப் படங்களை இயக்க வேண்டும். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மணிரத்னம்.