‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் 5 ஆவது நாள் வசூல் தொடர்பான விவரங்கள் வெளியாகிவுள்ளன.
ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுக்க 5,500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. கல்கியின் ஆகச்சிறந்த படைப்பான ‘ பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப்படம் நாவலை படித்தவர்கள் மத்தியிலும் சரி, படிக்காதவர்கள் மத்தியிலும் சரி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனிடையே, அண்மையில் இந்தப்படத்தின் வசூல் தொடர்பான விவரங்களை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம், முதல் நாளில் உலகம் முழுவதும் 80 கோடி ரூபாயையும், இரண்டாவது நாளில் 150 கோடி ரூபாயையும், மூன்றாவது நாளில் 200 கோடி ரூபாயையும் வசூல் செய்தது என அறிவித்தது.
இதனை தொடர்ந்து, விடுமுறை நாட்களான ஆயுத பூஜை நாளில் பல மக்கள் படத்தை காண வந்துள்ளனர். இதனால், படம் வெளியான நாள் முதல் இன்று வரை தமிழ்நாட்டில் மட்டுமே 100 கோடி ரூபாயை இப்படம் வசூல் செய்துள்ளது. படம் வெளியாகிய ஐந்தாவது நாளிலே தமிழ்நாட்டில் பொன்னியின் செல்வன் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை அசால்டாக வசூலித்துள்ளது. உலகளவில் இதுவரை 300 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது.
முன்னதாக, கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவலை தழுவி இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள சரித்திர காவியமான "பொன்னியின் செல்வன்" திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு இருக்கிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய் என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கும் இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்தப்படத்தின் பிரோமோஷனின் ஆரம்பமாக படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து படத்தில் இருந்து போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. அதனைத்தொடர்ந்து படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. ஆனால் டீசர் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை.
அதனைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையுலக ஜாம்பவான்களாக இருக்கும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டனர். இந்த நிகழ்வில் படத்தில் நடித்த கலைஞர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் இதர தமிழ் பிரபலங்களும் கலந்து கொண்டனர். அதனைத்தொடந்து பல்வேறு இடங்களுக்கு சென்று பிரோமோஷன் தொடர்பான பணிகளும் பரபரப்பாக நடந்தது குறிப்பிடத்தக்கது.