பொன்னியின் செல்வன் காவிய திரைப்படத்திற்கு பல பிரபலங்களும் தங்களின் விமர்சனங்களை வழங்கி வரும் நிலையில் தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை பொன்னியின் செல்வன் படக்குழுவினருக்கு ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் இமாலய சாதனை :
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. அமரர் கல்கியின் சரித்திர நாவலை உருவகப்படுத்தி திரையில் நம் கண்முன் கொண்டு வந்த பெருமை முழுவதும் இயக்குனர் மணிரத்னத்தையே சேரும். இப்படம் வெளியான சில நாட்களிலேயே சாதனை படைத்து 250 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்துள்ளது.
ரசிகர்கள், திரை விமர்சகர்கள், திரை பிரபலங்கள் என அனைவரும் இப்படத்தினை கொண்டாடி வரும் நிலையில் பலரும் சமூக வலைத்தளங்களின் மூலம் தங்களது வாழ்த்துகளை தெரிவித்த வண்ணமாக உள்ளனர். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ஷங்கர் பொன்னியின் செல்வன் படம் குறித்த ஒரு ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் "பல வருடங்களுக்கு பிறகு வெளியாகியிருக்கும் ஒரு தரமான தமிழ் சரித்திர படம். இயக்குனர் மணிரத்னம் சினிமாவின் கிங் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார். ரவிவர்மாவின் ஒளிப்பதிவிற்கு ஹாட்ஸ் ஆஃப். ஏ.ஆர். ரஹ்மானின் இசை எனக்குள் நுழைந்து ஆழமாக பதிந்து விட்டது. 3 மணி நேரமும் நம்மை தனது இசையில் ஆக்கிரமித்து விட்டார்.
இந்த காவிய திரைப்படத்தை நமக்கு அளித்த ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்" என ட்விட்டர் மூலம் பதிவிட்டுள்ளார் இயக்குனர் ஷங்கர். ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் இயக்குனர் மணிரத்னம் தான் முதல் பான் இந்தியா இயக்குனர் என தெரிவித்து இருந்தார் இயக்குனர் ஷங்கர்.
இயக்குனர் ஷங்கர் இரண்டு படங்களில் பிஸி :
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2 . சில காலம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதனுடன் நடிகர் ராம் சரண் நடிக்கும் ஆர்.சி.15 படத்தையும் இயக்குனர் ஷங்கர் ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார்.
அதனால் தன்னுடன் உதவி இயக்குனர்களாக பணியாற்றிய மூன்று முன்னணி இயக்குனர்களான வசந்த பாலன், சிம்புதேவன் மற்றும் அறிவழகன் ஆகிய மூவரும் இயக்குனர் ஷங்கருடன் இணைந்துள்ளார்கள். நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் காட்சிகளை இயக்குனர் ஷங்கர் படமாக்க மற்ற நடிகர்களின் காட்சிகளை அவரின் உதவி இயக்குனர்கள் மேற்கொள்ள உள்ளனர் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. 1996 வெளியான இந்தியன் திரைப்படம் ஒரு பிளாக் பஸ்டர் வெற்றி படமாக அமைந்தது என்பதால் இதன் இரண்டாம் பாகத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.