உலகம் முழுக்க  ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் 300 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து  கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. 




கல்கியின்  ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தழுவி உருவாக்கப்பட்டிருந்த இந்தப்படம் அந்தப்புத்தகத்தை படித்தவர்கள் மத்தியிலும், படிக்காதவர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றாலும், இன்னொரு தரப்பினர் படம் சுமாராகவே இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். 


இருப்பினும் படத்திற்கு செய்யப்பட்ட பிரோமோஷன்கள் எப்படியாவது படத்தை பார்த்துவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்திய நிலையில், சென்னை உட்பட பல இடங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து வருகின்றனர். 


இதனால் படத்திற்கு வசூல் குவிந்து வரும் நிலையில், தயாரிப்பு நிறுவனம் சார்பில் படம் குறித்தான வசூல் விவரங்கள் வெளியிடப்பட்டு வந்தன. அதன் படி பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான அன்றைய தினம் 80 கோடி வசூல் செய்ததாகவும், தமிழகத்தில் மிக விரைவாக 100 கோடியை எட்டிய படமாக மாறியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.


 






இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் படம் 200 கோடியை எட்டியதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது படம் 300 கோடியை வசூலித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 


'பொன்னியின் செல்வன்’ பாகுபலி படம் போல ஏன் இல்லை? - இயக்குநர் மணிரத்னம் அளித்த விளக்கம் 


இது குறித்து மணிரத்னம் பேசும் போது, “ ராஜராஜ சோழன் தமிழ்நாட்டில் மிகச்சிறந்த அரசராக இருந்தவர். அவர் பற்றி எடுக்கும் போது நேர்மையாக, உண்மையாக இருக்க வேண்டும். அதே போல அதனுடன் பயணிக்கும் கேரக்டர்களும் உண்மையாக இருக்க வேண்டும். இந்தக்கதை வந்தியத்தேவன் வழியாக வரும். அவன் கண்வழியாகத்தான் நாம் கதையை பார்க்கிறோம்.


அதனால் இது ஒரு யதார்த்தமான படைப்பு. அதனால் இதில் பாகுபலி போல அதித கற்பனை சார்ந்த காட்சிகள் இருக்காது. சூப்பர் ஹீரோக்கள் இருக்க மாட்டார்கள். ஆனால் இதில் எல்லாமே ரியலிஸ்ட்டிக்கா இருக்கும். பாடல்கள், இடங்கள் எல்லாமே அப்படித்தான் இருக்கும். அதனால் பாகுபலி, பொன்னியின் செல்வன் ஆகிய இருபடங்களும் வெவ்வேறு ஜானர்கள் கொண்டவை” என்றார்.