உழைத்து பணம் செலவு செய்து எடுக்கும் படங்களை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது வேதனை அளிக்கிறது என்று இயக்குனர் கௌதம் வாசுதேவ் பேசியுள்ளார்.


கல்லூரியில் கவுதம் வாசுதேவ்


சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் இயக்குநர் கௌதம் வாசுதேவ், விஜய் சேதுபதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய கௌதம் வாசுதேவ் சமீபத்தில் திரைக்கு வந்த 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் 'மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே ' பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது குறித்து பேசினார். சிம்பு நடிப்பில் ஜெயமோகன் எழுத்தில், ஏ. ஆர். ரகுமான் இசையமைக்க கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இந்த திரைப்படத்தில் சிம்பு தனது முழு நடிப்பு திறனையும் வெளிப்படுத்தியதாக விமர்சகர்கள் தெரிவித்தனர். அதிலும் மல்லிப்பூ பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரல் ஆனது. எங்கு சென்றாலும் மல்லிப்பூ பாடல் கேட்கும் அளவுக்கு பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட் ஆனது.



மல்லிப்பூ பாடல் உருவாக்கம்


அப்போது அவர், “ஒரு பெண்ணின் மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அந்த பாடல் அமைந்திருந்த நிலையில், பெண் ஒருவர் தனியாக நின்று நடனமாடும் பாடலாக இல்லாமல், ஆண்கள் சுற்றி நடனமாடும் வகையில் அந்த பாடலை எடுக்க முடிவு செய்தோம். அதனால் சிறிய அறையில் 40 ஆண்களும் இணைந்து கொண்டாடி நடனமாடும் வகையில் அந்த பாடலை எடுத்தோம். வழக்கமான முறையிலேயே சிந்திக்காமல் மாற்றி சிந்தித்து படைப்புகளை உருவாக்க வேண்டும், அப்போதுதான் வித்யாசமான உணர்வை மக்கள் பெறுவார்கள்” என்றார்.


தொடர்புடைய செய்திகள்: அக்டோபர் மாதம் எந்த ராசிக்கு ராஜயோகம்? எந்த ராசிக்கு கவனம் தேவை? முழு ராசிபலன்கள்...!


மொபைல் போன்


மேலும் பேசுகையில், “முடிந்த அளவு மொபைல் போன்களிடம் இருந்து விலகி இருங்கள். நான் பார்க்கிறேன் அது நிறைய இளைஞர்களின் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கிறது. முடிந்த அளவு அம்மா, அப்பா, நண்பர்களிடம் பேசுங்கள். இந்த வாழ்க்கை ஒரு நொடியில் சென்று விடக்கூடிய ஒன்று. சுற்றி இருப்பவர்கள் மீது அன்பு செலுத்துங்கள். மொபைல் கண்களை பாதிக்கிறது, அதை விட நேரடியாக மனதை பாதிக்கிறது, சுற்றி இருப்பவர்களை பாதிக்கிறது", என்றார்.



திரைப்படத்தை படம்பிடிப்பது


வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனை குறித்து பேசுகையில், "சமீபத்தில் கூட என் திரைப்படத்திற்கு அது போன்ற பிரச்சனையை நான் எதிர்கொண்டேன். திரையரங்குகளில் திரைப்படம் பார்ப்பவர்கள் 15 - 20 விநாடிகள் வரை திரைப்படத்தின் காட்சியை படம் படித்து அதை சமூக வலைதளங்களில் பரப்பி இருந்தனர். அது ரொம்ப தவறு. படம் பார்க்க திரையரங்கம் வருபவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த நினைக்கும்போது, திரையரங்கில் இருப்பதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொள்ளலாம். அது தவறில்லை. ஆனால் படக் காட்சியை பத்து, பதினைந்து வினாடிகள் வரை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது தவறான செயல். ஏனென்றால் ஒரு திரைப்படத்தை நாங்கள் நிறைய உழைத்து, நிறைய நேரத்தையும் பணத்தையும் செலவிடுகிறோம். அதை வீணாக்கும் வகையில் மொபைலில் சிலர் படக் காட்சியை பதிவிட்டு சமூக வலைதளங்களில் பரப்புவது வேதனை அளிக்கிறது”, என்று கூறினார்.