மணிரத்னம் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பொன்னியின் செல்வன் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியது.


எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா பொன்னியின் செல்வன்?


கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம்தான் நேற்று வெளிவந்த பொன்னியின் செல்வன். மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படத்திற்கு பல நாட்களாக ரசிகர்களின் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புகள் இருந்து வந்தது. படத்தின ரிலீஸ் டேட் நெருங்க நெருங்க, ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யுமா? என்ற பயமும் படக்குழுவைத் தொற்றிக் கொண்டது.


மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நேற்று திரைக்கு வந்த இப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் உலகமெங்கும் முதல் நாளில் எவ்வளவு கோடி வசூலித்தது என லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. 




இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, பிரபு, லால், ஜெயசித்ரா,நாசர் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.   மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்துக்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் நேற்று உலகமெங்கும் ரிலீசானது. மேலும் எங்கு பார்த்தாலும் பொன்னியின் செல்வன் குறித்த பேச்சுக்கள் தான் காணப்பட்ட நிலையில் முன்னதாக படக்குழுவினர் கேரளா, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, டெல்லி ஆகிய இடங்களுக்கு சென்று படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியது. 


பொன்னியின் செல்வன் படத்தில் அனைத்து கேரக்டர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம் புத்தகம் படிக்காதவர்களுக்கு கூட கதை புரியும்படி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 






உலகளவில் 80 கோடி வசூல்


பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ.80 வசூலை எட்டியுள்ளதாகவும், இதுதான் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஓப்பனிங் எனவும் லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் அக்டோபர் 5 ஆம் தேதி வரை தொடர் விடுமுறை தினங்கள் இருப்பதால் இப்படம் வசூலில் மகத்தான சாதனைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை பொன்னியின் செல்வன் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். 



பாலிவுட் வசூல் என்ன..?


பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியானது. ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான இப்படம், முதல் நாளில் 2 கோடி வசூல் செய்துள்ளது. டப்பிங் செய்யப்பட்டு வெளியாகும் படங்களுக்குரிய வசூலை மட்டுமே பொன்னியின் செல்வன் எட்டியுள்ளது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.