சூரரைப்போற்று படப்பிடிப்பு நடந்த மூன்று வருடம் தியானம் போல இருந்ததாக தேசிய விருது வாங்கிய பிறகு நிருபர்களைச் சந்தித்த நடிகர் சூர்யா தெரிவித்து உள்ளார்.
சூரரைப்போற்றுக்கு தேசிய விருது
கடந்த 2020-ஆம் ஆண்டிற்கான 68-வது தேசிய விருது பட்டியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்த விருது வழங்கும் விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு தலைமை தாங்கிய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கினார்.
தமிழ் சினிமா சார்பில், சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப்போற்று' திரைப்படத்திற்கு ஐந்து விருதுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' திரைப்படத்திற்கு மூன்று விருதுகளும், 'மண்டேலா' திரைப்படத்திற்கு 2 விருதுகளும் அறிவிக்கப்பட்டு இருந்தது. 'சூரரைப்போற்று' படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர் சூர்யாவுக்கு வழங்கினார். குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு. அதே போல சிறந்த திரைப்படத்திற்கான விருதை 2டி சார்பில் ஜோதிகா வாங்கினார்.
குடும்பத்தினருடன் சூர்யா
இந்த விருது வழங்கும் விழாவில் சூர்யா விருது வாங்குவதை ஜோதிகாவும், ஜோதிகா விருது வாங்குவதை சூர்யாவும் கீழிருந்து புகைப்படம் எடுக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி இருந்தது. இந்த விருது விழாவில் சூர்யா ஜோதிகாவுடன் அவரது மகன் மற்றும் மகளும், அவர்களுடன் சிவகுமார் மற்றும் அவரது மனைவியும் கலந்துகொண்டனர். விருது வாங்கிய பிறகு சூர்யா செய்தியாளர்களை சந்தித்தார்.
தொடர்புடைய செய்திகள்: படிச்சுப் படிச்சே நான் வயசாளி ஆயிடுவேன்... கெஞ்சிய குழந்தை உருகிய நெட்டிசன்கள்
இயக்குனருக்கு நன்றி
அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நிச்சயமா ரொம்ப பெருமையா இருக்கு… இந்திய அரசுக்கும், தேசிய விருதுகள் தேர்வுக்குழுவிற்கும் ரொம்ப நன்றி. நிறைய நிறைய உணர்வுகள் ஓடிக்கொண்டிருக்கிறது. நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டிய தருணம் இது. கண்டிப்பா முதல்ல இதனுடைய இயக்குனர் சுதா கொங்கரா. லாக்டவுன் நேரத்துல, எல்லாரும் உடஞ்சு போயி இருந்தப்ப இது மாதிரி ஒரு படத்தை பண்ணது மட்டுமில்லாம, அதை வெளியிட வேண்டும் என்று நினைத்ததற்கும்", என்றார்.
நம்பிக்கை தந்த படம்
மேலும் பேசிய அவர், "எல்லோருமே துவண்டு போய் இருந்த நேரத்தில் நம்பிக்கையாக அமைந்தது இந்த திரைப்படம். இது சுதாவின் 10 வருட குழந்தை. இப்போது முழுமை பெற்றுள்ளது. சூரரைப்போற்று திரைப்படத்திற்கு 5 தேசிய விருதுகள், வேறென்ன எதிர்பார்க்க முடியும் எங்களால். கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு பிறகு ஒரு தமிழ் திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது வாங்குவது இன்னும் சிறப்பான விஷயம்.
எல்லாவற்றிற்கும் சுதாவிற்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அதோடு அவருடைய டீம். இந்த திரைப்படம் உருவான 3 வருடம் கிட்டத்தட்ட ஒரு தியானம் போலதான் இருந்தது. என் மனைவி, அவர் எப்போதும் அவரது வெளிச்சங்களை என் மீது ஒளிரவிட்டுக்கொண்டிருக்கிறார். நான் இந்த படத்திற்குள் வருவதற்கு முன்பு மனதளவில் அவர்தான் வந்தார். அதனால்தான் சிறந்த திரைப்படத்திற்கான விருதை அவர் பெற்றார். இந்த விழாவில் எங்களோடு எங்கள் குழந்தைகள் இருவரும் இருந்தும், அப்பா அம்மா இருந்ததும் மிக்க மகிழ்ச்சி. இந்த சிறப்பான தருணத்தில் அவர்கள் இருந்தது, எல்லாம் இந்த நாளை மறக்கமுடியாததாக மாற்றியுள்ளது" என்று கூறினார்.