கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு கடந்த ஆண்டு வெளியாகி கோலிவுட்டின் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்துள்ளது ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம். 


சென்ற ஆண்டின் மாபெரும் வெற்றிப்படம்


பல ஆண்டு கால முயற்சிக்குப் பிறகு தனது கனவுப்படமான பொன்னியின் செல்வனை மணிரத்னம் வெற்றிகரமாக எடுத்து முடித்த நிலையில் , தமிழ்,தெலுங்கு,இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் சென்ற ஆண்டு பொன்னியின் செல்வன் வெளியானது.


பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி, நேர்த்தியான திரைக்கதை,பிரம்மாண்ட காட்சிகள் ஆகியவற்றுடன் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து பொன்னியின் செல்வன் படம் ஹிட் அடித்தது.


ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்த நிலையில், ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்ய, மெட்ராஸ் டாக்கீஸ் - லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்தது.


விக்ரம்,ஐஸ்வர்யா ராய், கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி சரத்குமார், ஐஸ்வர்யா லெஷமி, பார்த்திபன் என பெரும் நடிகர் பட்டாளமே நடித்திருந்த இப்படம் 500 கோடிகளுக்கும் மேல் வாரிக்குவித்தது. மேலும் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்திலும் வெளியாகி பொன்னியின் செல்வன் படம் வரவேற்பைப் பெற்றது. 


சம்மர் ஸ்பெஷல் இரண்டாம் பாகம்


இந்நிலையில், 2023 சம்மர் ஸ்பெஷலாக பொன்னியின் செல்வன் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில் , ஏப்ரல 28ஆம் தேதி படம் வெளியாகும் என முன்னதாக அறிவிப்பு வெளியாகி முழுவீச்சில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.


முன்னதாக குந்தவையாக மாறிய த்ரிஷாவின் வீடியோ, மற்றும் அகநக முழு நீளப் பாடல் ஆகியவை வெளியாகி இணையத்தில் லைக்ஸ் அள்ளின. 


இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் கதையில் முக்கியக் கதாபாத்திரங்களில் ஒருவரான ‘ஆதித்த கரிகாலன்’ பாத்திரத்தில் நடித்த விக்ரமின் பாத்திரம் வடிவமைக்கப்பட்டது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. 


ஆதித்த கரிகாலனின் ஆடை வடிவமைப்பு, அணிகலன்கள் வடிவமைப்பு ஆகியவை அடங்கிய வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது. மேலும் படத்தின் ட்ரெய்லர் லோடிங் எனும் வசனமும் இந்த வீடியோவில் இடம்பெற்று பொன்னியின் செல்வன் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


 






பட வெளியீட்டுக்க்கு இன்னும் சுமார் ஒரு மாத காலமே உள்ள நிலையில், சென்ற பாகத்தைப் போலவே இந்தப் பாகத்துக்கும்  இனி அப்டேட்கள் வரிசைக்கட்டி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.