‘அகநக’ பாடலின் 10 நொடிகள் க்ளிம்ப்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி லைக்ஸ் அள்ளி வருகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி சுமார் 500 கோடிகள் வரை வசூல் செய்த பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் நான்கு நாள்களில் வெளியாக உள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஷோபித்தா துலிபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.
இப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல்.28 திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான இறுதிக்கட்ட ப்ரொமோஷன் பணிகள் முழுவீச்சில் தற்போது நடைபெற்று வரும் நிலையில், படத்தின் பாடல்கள் வெளியாகி இணையத்தில் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
அந்த வகையில் கார்த்தியின் வந்தியத்தேவன் கதாபாத்திரம் - த்ரிஷாவின் குந்தவை பாத்திரங்களுக்கென அமைந்து முதல் பாகத்திலேயே கவனமீர்த்தது ‘அகநக’ பாடல்.
‘உயிர் உங்களுடையது தேவி’ எனும் வசனத்துடன் தொடங்கி, கார்த்தி - த்ரிஷாவின் இடையேயான கெமிஸ்ட்ரி வரை இந்தப் பாடல் சம்பந்தப்பட்ட அனைத்தும் பெரும் ஹிட் அடிக்க பலரது ரிங் டோனாக இந்தப் பாடல் மாறி வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தில் இந்தப் பாடலின் முழுநீள வெர்ஷன் முதல் பாடலாக வெளியானது. இளங்கோ கிருஷ்ணன் இந்தப் பாடலை எழுதியுள்ள நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சக்தி ஸ்ரீ கோபாலன் இந்தப் பாடலைப் பாடியுள்ளார்.
இந்நிலையில், இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலும் தனி வரவேற்பைப் பெற்று வந்த நிலையில், தற்போது அகநக பாடல் பின்னணியில் த்ரிஷா - கார்த்தி இடையேயான 10 நொடிகள் அடங்கிய காதல் காட்சி வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே இரண்டாம் பாகத்தில் இடம்பெறும் குந்தவை - வந்தியத்தேவன் இடையேயான காதல் காட்சிகள் குறித்து மணிரத்னத்தின் மனைவி நடிகை சுஹாசினி உள்பட பலரும் பாராட்டியுள்ள நிலையில், காதல் ததும்பும் இந்தக் காட்சி வெளியாகி இணையத்தில் இதயங்களைக் குவித்து வருகிறது.
மணிரத்னத்தின் வழக்கமான மேஜிக்கல் காதல் காட்சியுடன் வெளியாகியுள்ள இந்த க்ளிம்ப்ஸ் வீடியோ இணையத்தில் வரவேற்பைப் பெற்று வருகிறது.
சென்ற ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் ஒவ்வொரு பாடலும் ஹிட் அடித்து ஒட்டுமொத்த ஆல்பமும் ரசிகர்களின் விருப்பமான ஆல்பமாக பொன்னியின் செல்வன் மாறியது.
மேலும், பாடல்கள் தாண்டி ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்குமென கம்போஸ் செய்யப்பட்ட பிஜிஎம்களும் படத்தின் பின்னணி இசையும் பெரும் பாராட்டுகளைப் பெற்றன.
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் மொத்தம் 7 பாடல்கள் அமைந்துள்ள நிலையில், இந்த ஆல்பமும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
மேலும் படிக்க: Leo Audio Launch: லியோ இசை வெளியீட்டு விழா சென்னையில் இல்லை: சர்ப்ரைஸ் கொடுக்க தயாராகும் விஜய்: எந்த ஊர் தெரியுமா?