நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நடக்கப்போவதில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


மிரட்டும் லியோ கூட்டணி


விக்ரம் படத்துக்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜூம், வாரிசு படத்திற்கு பிறகு நடிகர் விஜய்யும் இணைந்துள்ள படம் “லியோ”. கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான மாஸ்டர் படத்திற்கு பிறகு இந்த கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளதால் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் இப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் ஹீரோயினாக நடிகை த்ரிஷா நடிக்கிறார்.  இதன் மூலம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் மீண்டும் அவர் ஜோடி சேர்ந்துள்ளார். 


மேலும் லியோ படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, இயக்குநர் மிஷ்கின், நடிகர் மன்சூர் அலிகான், மலையாள இளம் நடிகர் மேத்யூ தாமஸ், இயக்குநர் கௌதம் மேனன், நடிகர் அர்ஜூன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, சண்டைப் பயிற்சியாளராக அன்பறிவ், எடிட்டிங் ஃபிலோமின் ராஜ் பணியாற்ற, வசனங்களை லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், தீரஜ் வைத்தி ஆகியோர் எழுதியுள்ளனர். 


இந்த படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டப்போதே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.  


விறுவிறு ஷூட்டிங் 


லியோ படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு காஷ்மீரில் நடைபெற்றது. இதற்காக கடும் பனியில் விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்தது வீடியோவாக வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.  கிட்டத்தட்ட 2 மாதங்கள் காஷ்மீரில் ஷூட்டிங் நடந்த நிலையில் படக்குழு கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் 2 ஆம் கட்ட படப்பிடிப்பை தொடங்கியது.சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் படத்தின் ஷூட்டிங் நடைபெறுவது தெரிந்து ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது பையனூரில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. 


லியோ இசை வெளியீட்டு விழா


இதனிடையே லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார், நடிகர் விஜய் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை தென் தமிழகத்தில் நடத்த விரும்புவதாக தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். அதன்படி திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் ஏதேனும் ஒன்றில் நிகழ்ச்சியை நடத்த பரிசீலிக்கப்பட்டு வருவதாக லலித் குமார் தெரிவித்துள்ளார். வழக்கமாக விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் தான் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.