பொன்னியின் செல்வன் படத்தின் 2 ஆம் பாகத்தில் இடம் பெறும் கமலின் தொடக்க உரையை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. 


எழுத்தாளர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவல் படமாக எடுக்கப்பட்டுள்ளது. இயக்குநர் மணி ரத்னத்தின் கைவண்ணத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த பொன்னியின் செல்வன் படம் வசூலில் 500 கோடியை தாண்டியதாக சொல்லப்படுகிறது.  


ஜெயம் ரவி, ஜெயராம்,  கார்த்தி, த்ரிஷா, பிரபு, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, பிரபு, லால்,ஜெயசித்ரா,நாசர், ரகுமான், கிஷோர் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் படத்துக்கான ப்ரோமோஷன்களும் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது.  


முன்னதாக  சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 29 ஆம் தேதி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் பங்கேற்றார். மேலும் அமைச்சர் துரை முருகன், இயக்குநர் பாரதிராஜா, நடிகர் சிலம்பரசன் என பலரும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் கமல்ஹாசன் பின்னணி குரலுடன் தொடங்கியது. இது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இந்நிலையில்  பொன்னியின் செல்வன் படத்தின் 2 பாகமும் கமலின் பின்னணி குரலுடன் தான் தொடங்குகிறது. அதனை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. 


மிரட்டும் கமலின் குரல்:


அந்த வீடியோவில், “ஆண்டு 968, சோழர்களின் பூமி ஒரு பெரும் போரை எதிர்நோக்கி கொண்டிருந்தது. ராஷ்ட்ரக்கூட மன்னன் கோத்திகன் தஞ்சையை தாக்க ஒரு பெரும்படையை திரட்டி கொண்டிருந்தான். வீரபாண்டியனின் சாவுக்கு பழிதீர்க்க பாண்டிய ஆபத்துதவிகள் சோழ நாட்டுக்குள் ஊடுருவியிருந்தது. சுந்தர சோழரின் பெரிய தந்தையான கண்டராதித்தரின் மகன் மதுராந்தகன், தன் தந்தையை விருத்தையும், தாயின் ஆணையையும் மீறி மணிமுடிக்காக வெறிகொண்டிருந்தான். 


சோழ நாட்டின் நிதியமைச்சர் பெரிய போர் வீரர் பெரிய பழுவேட்டரையரும், சிற்றரசர்களும் மதுராந்தகனுக்கு துணையாக நின்றனர். பெரிய பழுவேட்டரையரின் மனைவி நந்தினி, பாண்டிய ஆபத்துதவிகளுடன் சேர்ந்து சோழ நாட்டுக்கு எதிராக சதியில் இறங்கினாள். இளவரசன் அருண்மொழிவர்மனை இலங்கையில் இருந்து சிறைபிடித்து வர அரசரை கொண்டே ஆணை பிறப்பித்தாள். 



ஆனால் அருண்மொழியுடன் சோழ சிறைக்கலம் புயலில் சிக்கி கடலில் மூழ்கியது. அருண்மொழி இறந்ததாக பரவிய செய்தியால் நாடு கொந்தளித்தது. பொன்னியின் செல்வன் கடலில் மூழ்கியதுக்கு நந்தினியே காரணம் என ஆதித்ய கரிகாலன் வெறிகொண்டு தன் படையுடன் தஞ்சையை நோக்கி விரைந்தான்” என்ற வரிகள் இடம் பெற்றுள்ளது.