பிரபல இயக்குனர் மணிரத்னமின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படம் வெளியாவதற்கு முன்பாகவே, முன்பதிவில் கிட்டத்தட்ட 17 கோடி வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. உலகம் முழுதும் வெளியான இத்திரைப்படத்தை, சினிமா ரசிகர்கள் மட்டுமன்றி அனைத்து தரப்பு மக்களும் திருவிழா போல கொண்டாடினர். 5,500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இந்தப்படம் இந்த ஆண்டு வெளியான விக்ரம் உட்பட அனைத்து தமிழ் படங்களிலும் வசூலை முறியடித்து சாதனை படைத்து இருக்கிறது. உலகளாவிய மொத்த வசூல் ரூ.400 கோடியைத் தாண்டியுள்ளது.  படம் விரைவில் 500 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.






இதற்கிடையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான ஹைப் அதிகரிக்க தொடங்கிவிட்டது. பொன்னியின் செல்வன் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்கான ஷூட்டிங்கை ஒரே நேரத்திலேயே மணிரத்தினம் எடுத்து முடித்துவிட்டார். படம் 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்னும் 9 மாதங்களில் அடுத்த பாகத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. பொன்னியின் செல்வன்-1 முடிவடைந்த இடத்திலிருந்து இரண்டாம் பாகத்தின் கதைக்களம்  தொடங்கவுள்ளது.  படம் அருள்மொழி வர்மனை  மையமாக வைத்து நகரவுள்ளது. சோழப் பேரரசின் தலைசிறந்த ஆட்சியாளரான முதலாம் இராஜராஜ சோழனாக மாறுவதற்கான அவரது பயணத்தை இந்த பாகம் விளக்கும் . மேலும் மர்மமான நந்தினி கதாபாத்திரத்தின் அசல் குணங்களும் கூட இரண்டாம் பாகத்தில் வெளிப்படையாக்கப்படும் என்பதால்  முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்திற்குதான் அதிக எதிர்பார்ப்புகள் என்பதில் சந்தேகமில்லை.


 






முன்னதாக பொன்னியின் செல்வன் படம், வெளியான ஒரே வாரத்தில் 100 கோடி வசூலைத் தாண்டி சாதனைப் படைத்தது. இதையடுத்து, படத்தின் வசூல் குறித்த தரவுகளை லைகா நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வந்தது. அதன்படி, திரைப்படம் வெளியான அன்றைய தினம் 80 கோடி வசூல் செய்ததாகவும், தமிழகத்தில் மிக விரைவாக 100 கோடியை எட்டிய படமாக மாறியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து 300 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அண்மையில் படம் 450 கோடியை தாண்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.