பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த 8 நாள்களில் இந்தியா முழுவதும் 158 கோடிகள் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


பொன்னியின் செல்வன் 2:


முதல் பாகத்தின் வெற்றிக்குப் பிறகு பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் 2  திரைப்படம் ஏப்.28ஆம் தேதி உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.


எழுத்தாளர் கல்கியின் நாவலைத் தழுவி அதே பெயரில் மணிரத்னம் பலகட்ட முயற்சிகளுக்குப் பின் உருவாக்கியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், ஜெயராம், பார்த்திபன், ஷோபிதா துலிபாலா, ரஹ்மான், விக்ரம் பிரபு, பிரபு, ஜெயசித்ரா,லால், நாசர் எனப் பெரும்  நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் குவிந்துள்ளனர்.


குவியும் வசூல்:


லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக இந்தப் படத்தைத் தயாரித்துள்ள நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் முதல், இரண்டாம் பாங்களின் பாடல்கள் ஹிட் அடித்துள்ளன. பின்னணி இசையும் படத்துக்கு பக்கபலமாக அமைந்து தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுள்ளது.  இதுவரை படம் வெளியாகி 8 நாள்கள் கடந்து இன்று 9ஆம் நாள் திரையரங்கில் ஓடி வருகிறது. இதனிடையே, 4ஆவது நாளே படம் 200 கோடிகளை உலகம் முழுவதும் வசூலித்ததாக லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.


இந்நிலையில், இந்தியப் படங்களின் பாக்ஸ் ஆஃபிஸ் தகவல்களைப் பகிரும் Sacnilk தளம் பொன்னியின் செல்வன் திரைப்படம் இந்திய அளவில் இதுவரை மொத்தம் 158 கோடிகள் வரை வசூலித்துள்ளதாகத் தகவல் பகிர்ந்துள்ளது. 


300 கோடி:


இந்தியாவில் முதல் நாள் 28.45 கோடிகளும், இரண்டாம் நாள் 30.95 கோடிகளும், மூன்றாம் நாள் 35.5 கோடிகளும், நான்காம் நாள் 27.45 கோடிகளும், ஐந்தாம் நாள் 12.35 கோடிகளும், ஆறாம் நாள் 9.15 கோடிகளும், ஏழாம் நாள் 7.75 கோடிகளும், எட்டாம் நாள் 6.5 கோடிகளும் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உலகம் முழுவதும் இப்படம் 300 கோடிகள் வரை விரைவில்  வசூலிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


 






முன்னதாக பொன்னியின் செல்வன் 2  திரைப்படத்தைப் பார்த்து ரசித்த  இயக்குநர் சங்கர்,  படத்தை மணிரத்னம் மிக நுணுக்கமாக எடுத்துள்ளதாகவும், ஐஸ்வர்யாராய் பச்சன், விக்ரம் இருவரும் பிரமிக்க வைத்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளதாகவும் பாராட்டி இருந்தார். 


மேலும், ஏ.ஆர்.ரஹ்மான் இசை, ரவிவர்மனின் ஃப்ரேம்கள் என தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் ஷங்கர் பாராட்டு தெரிவித்திருந்தார். பொன்னியின் செல்வன் 2 படத்தில் நாவலைக் கடந்து படத்தில் பல காட்சிகள் திரைக்கதைக்காக மாற்றப்பட்டிருந்த நிலையில், இது குறித்து அதிருப்திகளும் கலவையான விமர்சனங்களும் ஒருபக்கம் எழுந்துள்ளன. எனினும் முதல் பாகம் அளவுக்கு இல்லாவிட்டாலும் இவற்றையெல்லாம் கடந்து படம் வணிகரீதியாக நல்ல வசூலைக் குவித்து வருகிறது.