பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று நடைபெற உள்ள நிலையில் அதுதொடர்பாக பல தகவல்கள் வெளியாகியுள்ளது. 


கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இயக்குநர் மணிரத்னத்தால் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, பிரபு, லால், ஜெயசித்ரா,நாசர் உள்ளிட்ட  பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. 


பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. வசூலிலும் ரூ.500 கோடியை தாண்டிய இப்படம் அந்தாண்டின் அதிக வசூல் செய்த தமிழ் படங்கள் பட்டியலில் முதலிடம் பெற்றது. குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு படையெடுத்தனர். நாவலை படித்தவர்களுக்கும், படிக்காதவர்களுக்கும் என அனைவரையும் திருப்திப்படுத்தும் விதத்தில் படமானது எடுக்கப்பட்டிருந்தது. 


இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் 2 ஆம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். தொடர்ந்து படத்தின் ப்ரோமோஷன்களையும் படக்குழு தொடங்கிய நிலையில், படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று நடைபெறுகிறது. மாலை 6 மணி தொடங்கும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கிறார். 


கடந்த முறை கமலுடன் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார். அதேபோல் பத்து தல படம் ரிலீசாகும் நிலையில் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் சிலம்பரசன் பங்கேற்பார் எனவும் கூறப்படுகிறது. 


முன்னதாக சில தினங்களுக்கு முன்பு பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து “அக நக” பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இப்படியான சூழலில் இன்றைய நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்வு நடக்கவுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தின் தமிழ்நாடு தியேட்டர் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் படத்தின் ட்ரெய்லர் இரவு 9.30 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.