கோவை ராமநாதபுரம் பகுதியில் இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் இருந்து உரிமம் இல்லாத 2 நாட்டு துப்பாக்கிகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.


கோவை ராமநாதபுரம் மசால் லே அவுட் பகுதியில் வசித்து வருபவர் அயோத்தி ரவி என்கிற ரவிச்சந்திரன். 45 வயதான இவர் இந்து முன்னணி அமைப்பில் கோவை மாவட்ட துணைத் தலைவராக இருந்து வருகிறார்.  இந்நிலையில் ராமநாதபுரம் பகுதியில் இன்று வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த ராமநாதபுரம் காவல் துறையினர், அவ்வழியாக நடந்து சென்ற அயோத்தி ரவியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் இடுப்பில் உரிமம் இல்லாத நாட்டு கைத்துப்பாக்கி ஒன்றை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த நாட்டு கைத்துப்பாக்கியை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். 


இதையடுத்து மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை காவல் துறையினர் ரவியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் அளித்த தகவலின் பேரில் ரவி வீட்டில் காவல் துறையினர் சோதனை நடத்தினர். அதில் உரிமம் இல்லாத மேலும் ஒரு நாட்டு கைத்துப்பாக்கியும், 5 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக இந்து முன்னணி கோவை மாவட்டத் துணைத் தலைவர் ரவிச்சந்திரன் மீது ராமநாதபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே ரவிச்சந்திரன் மீது கோவை மாநகரிலும், மாவட்டத்திலும் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


காவல் துறையினர் விசாரணையில் ரவிச்சந்திரன் கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு வந்ததும், அதற்காக துப்பாக்கியை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும், இரண்டு கை துப்பாக்கிகள் சென்னையில் உள்ள அவரது நண்பர்கள் மூலம் வாங்கப்பட்டதும், எந்தவித அனுமதியும் பெறாமல் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து யாரிடமிருந்து இந்த துப்பாக்கிகள் வாங்கப்பட்டது? துப்பாக்கிகளை பயன்படுத்தி மற்றவரை மிரட்டினாரா? உள்ளிட்டவை குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண