பொன்னியின் செல்வன்(Ponniyin Selvan) படத்தில் இருந்து 2 ஆம் பாடல் வெளியாகும் தேதியை லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.
கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பொன்னியின் செல்வன் டீசர் வெளியிட்டு விழா கடந்த ஜூலை 8 ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் பிரமாண்டமாக நடைபெற்றது.
5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் அப்டேட்டுகள் அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை படக்குழு மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். அந்த வகையில் கடந்த ஜூலை 31 ஆம் தேதி படத்தின் முதல் பாடலாக “பொன்னி நதி” வெளியானது.கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் எழுதிய இப்பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடியிருந்தார். இதனைத் தொடர்ந்து பொன்னி நதி பாடல் பாடலின் படப்பிடிப்பில் என்ன நடந்தது என்பது குறித்த வீடியோவை லைகா நிறுவனம் வெளியிட்டது.
இதனிடையே நேற்றைய தினம் பொன்னியின் செல்வன் படத்தை ஐமேக்ஸ் திரை வடிவிலும் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்தது. இதன் மூலம் தமிழில் ஐமேக்ஸ் வடிவில் வெளியாகும் முதல் திரைப்படம் என்ற பெருமையை பொன்னியின் செல்வன் பெற்றது. இப்படத்தில் நடிகர் விக்ரம் ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஆதித்த கரிகாலன் போரில் வெற்றி அடைந்ததை கொண்டாடும் வகையில் 2 ஆம் பாடல் ஆகஸ்ட் 18 அல்லது 19 ஆம் தேதியில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து 2 ஆம் பாடல் ஆகஸ்ட் 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சோழா சோழா என தொடங்கும் இப்பாடலை இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார். சத்ய பிரகாஷ், வி.எம்.மகாலிங்கம், நகுல் அபயங்கார் ஆகியோர் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read | Krishna Jayanthi 2022: கோகுலத்து கண்ணனை வரவேற்கும் கிருஷ்ண ஜெயந்தி! வரலாறு என்ன?