வரும் பொங்கலுக்கு சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி படங்கள் நேருக்கு நேர் மோதும் நிலையில், இந்த முறை வெற்றிபெறப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அயலான் vs மேரி கிறிஸ்துமஸ்
- ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அயலான்’ (Ayalaan) படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்தி சிங், இஷா கோபிகர், யோகிபாபு, கருணாகரன், பால சரவணன், ஷரத் கேல்கர்,பானுப்ரியா என பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகியுள்ளது. கிட்டதட்ட 5 ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வந்த இப்படம் ஒருவழியாக ரிலீசுக்கு தயாராக உள்ளது சிவகார்த்திகேயன் ரசிகர்களை நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.
- பாலிவுட்டில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள படம் “மேரி கிறிஸ்துமஸ்”. இந்த படத்தை அந்தாதூன் படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஹீரோயினாக கத்ரீனா கைஃப் நடித்துள்ள நிலையில் சஞ்சய் கபூர், வினய் பகத், ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ப்ரீதம் இசையமைத்துள்ள மேரி கிறிஸ்துமஸ் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. இந்த 2 படங்களும் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
முந்தைய நிலவரம் என்ன?
இதற்கு முன்னாள் சிவகார்த்திகேயன் - விஜய் சேதுபதி நடித்த படங்கள் இரண்டு முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் யார் வெற்றி பெற்றது என்பது பற்றி காணலாம்..
எதிர் நீச்சல் vs சூதுகவ்வும்
2013 ஆம் ஆண்டு மே 1 ஆம்தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் எதிர்நீச்சல் படம் வெளியானது. நடிகர் தனுஷ் தயாரித்த இந்த படத்தில் ப்ரியா ஆனந்த், சதீஷ், நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்த இப்படத்தை துரை செந்தில் குமார் இயக்கியிருந்தார். தனது பெயரால் கேலி கிண்டலுக்கு உள்ளாகி மன உளைச்சலுக்கு ஆளாகும் ஒருவன், பின்னாளில் சாதனைப் படைக்கும்போது அவனது பெயர் எப்படி பாராட்டைப் பெறுகிறது என்பதை மையப்படுத்திய இப்படம் சூப்பர் ஹிட்டானது.
அதே நாளில் நடிகர் விஜய் சேதுபதி மாறுபட்ட வேடத்தில் நடித்த “சூதுகவ்வும்” படம் வெளியாகியிருந்தது. நலன் குமாரசாமி இயக்கிய இப்படத்தில் சஞ்சிதா ஷெட்டி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், ரமேஷ் திலக், கருணாகரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படம் வித்தியாசமான முறையில் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை பற்றிய கதையாக அமைக்கப்பட்டிருந்து. சூது கவ்வும் படம் விஜய் சேதுபதிக்கு நல்ல அடையாளத்தைப் பெற்றுக் கொடுத்தது.
ரெமோ vs றெக்க
2016 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ், யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் “ரெமோ”. அனிருத் இசையமைத்த இப்படத்தில் காதலித்த பெண்ணை கரம் பிடிக்க ‘அவ்வை சண்முகி’ கமல் போல பெண் வேடம் போட்டு சிவகார்த்திகேயன் செய்யும் தில்லுமுல்லு சம்பவங்கள் கதையாக அமைக்கப்பட்டிருந்தது. இந்த படம் சுமாரான வெற்றியையே பெற்றது.
அதே நாளில் ரத்தினம் சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி, லட்சுமி மேனன், சிஜா ரோஸ், கே.எஸ்.ரவிகுமார், ஹரிஷ் உத்தமன், கிஷோர் உள்ளிட்டோர் நடித்த படம் “றெக்க”. டி.இமான் இசையமைத்த இப்படம் சுமாரான வெற்றியையே பெற்றது.
இப்படி 2 முறை மோதி, அதில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் இருக்கும் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி படங்கள் 3வது முறையாக மோதும் நிலையில் இது யார் ஜெயிக்கப்போகிறார்கள் என்பது நாளை மறுநாள் (ஜனவரி 12) தெரிந்து விடும்.