Femi9 Nayanthara : சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடிகை நயன்தாராவின் நிறுவனமான பெமி 9  வெற்றி விழா நடைபெற்றது. இதில் திரைப்பட நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன், நீயா நானா கோபிநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகை நயன்தாரா, "உங்கள் அனைவரின் முன்பாக நிற்பதற்கு மிகவும் பெருமையாக உள்ளது. இந்தப் பெருமைக்கு காரணம் நீங்கள்தான். எனது சுயநலத்தின் பின்னால் ஒரு பொது நலன் உள்ளது. எனவேதான் சானிட்டரி நாப்கின் நிறுவனத்துடன் இணைந்துள்ளேன். எங்களுக்கு சமூக பொறுப்பு உள்ளது" என்றார்.



மேலும், "மாதவிடாய் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது. இன்னும் பெண்கள் சானிட்டரி நாப்கின்கள் பெயரை சொல்வதற்கு கூட தயங்குகின்றனர். இந்த விழிப்புணர்வு நாட்டில் உள்ள அனைத்து பெண்களிடமும் சென்று சேர வேண்டும். பெண்களுக்கு நாப்கின்களுக்கான புரிதல் வந்துவிட்டால், அவர்களை அவர்களே பார்த்துக் கொள்வார்கள். அதற்கு தேவையான சுகாதாரமான நாப்கின்களை பெண்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அதுவே எங்களது நோக்கமாகும். எங்களது நிறுவனத்தின் முதல் நோக்கமானது பெண்களின் ஆரோக்கியம் ஆகும். பெண்கள் நன்றாக இருந்தால், சமுதாயம் நன்றாக இருக்கும். அவர்களது குடும்பம் நன்றாக இருக்கும். இதுவரை ஒரு கோடி நாப்கின்கள் எங்களது நிறுவனம் மூலமாக விற்பனையாகியுள்ளது. இதற்குக் காரணம் நீங்கள்தான். உங்களால் தான் இதனை செய்ய முடிந்தது.



”எப்போதும் நமது காதுகளில் கேட்கும் ஒரு விஷயம். ஒவ்வொரு ஆணுக்கு பின்னும் ஒரு பெண் இருப்பார்கள் என்பதுதான். ஆனால் தற்போது வெற்றிகரமாக உள்ள அனைத்து பெண்களின் பின்னாலும், மகிழ்ச்சியாக உள்ள பெண்களின் பின்பும் கண்டிப்பாக ஒரு ஆண் இருக்கிறார்கள். எனது வாழ்க்கையில் நான் செய்யும் சில விஷயங்களில், சினிமாவை தவிர்த்து எனது கணவர் விக்னேஷ் சிவன் நான் இன்னும் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறுகிறாரே தவிர, எதற்காக நீங்கள் இதை செய்கிறீர்கள் என்று ஒரு நாளும் கேட்டதில்லை. இதற்கு முன்பாக, யாரும் நம்மை கேள்வி கேட்கவில்லை, என்றால் அதுவே பெரிய விஷயம் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் அதிகம் தகுதி உள்ளவர் என்றும், நீங்கள் ஏன் இத்தோடு நிறுத்த வேண்டும் என்று ஒரு கேள்வியை கேட்பவர்தான் என் கணவர் விக்னேஷ் சிவன். இதனை எந்த மேடையிலும் நான் பேசியது கிடையாது அதற்கான வாய்ப்பும் கிடைத்ததில்லை" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.