திரை உலகில் ஜெயிக்க திறமை இருந்தால் போதுமென்பதற்கு ஆகச்சிறந்த உதாரணமாக தான், கடந்த சில தசாப்தங்களாக தமிழ் சினிமாவின் ஆதர்ஷன நாயகனாக விளங்கி வருகிறார் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் ஒரு கணம் திரும்பி பார்க்காத ஆள் இல்லை, ரசிகர்கள் அவர் வசனம் பேச நாளில்லை. நாள்தோறும் நாம் பயன்படுத்தும் பல மேனரிசங்களின் பிறப்பிடம், ஸ்டைலின் இருப்பிடம். விழுந்தால் எழ முடியாத யானையாக அல்லாமல், சீறிப்பாயும் குதிரையையாய் எழுந்து வெற்றிகளை தனதொரு அங்கமாக்கியவர்.
”பஞ்ச்னா ரஜினி, ரஜினின்னா பஞ்ச்" எனும் வகையில் அவர் பேசும் வசனங்களுக்கு திரையரங்கில் தீப்பொறி பறக்க, அவ்வப்போது தமிழக அரசியல் வட்டாரத்தை அதிரச் செய்யும் வகையிலான பல அதிரடி வசனங்களையும் ரஜினி பேசி ஆச்சரியப்படுத்தியுள்ளார். ஆரம்பத்தில் அரசியலா ”நோ” என எண்ட் கார்ட் போட்ட ரஜினியே, நாளடைவில் ”எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்” என பேச அவரது ரசிகர்கள் மத்தியிலும் அரசியல் ஆசை தொற்றிக்கொண்டது.
அனல் பறந்த வசனங்கள்:
1993ல் அன்றைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் வருகைக்காக போயஸ் கார்டனில் ரஜினியின் கார் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக ரஜினி எங்கும் பேசியதில்லை. ஆனால், அதற்கடுத்த சில மாதங்களில் வெளியான அண்ணாமலை திரைப்படத்தில், எம்பாட்டுக்கு என் வேலையை செஞ்சிக்கிட்டு சிவனேன்னு நான் ஒரு வழில போய்க்கிட்டிருக்கேன். என்னை வம்புக்கிழுக்காதீங்க. வம்புக்கிழுத்தா நான் சொன்னதையும் செய்வேன்... சொல்லாததையும் செய்வேன்" என பேச, இது எங்கயோ இடிக்குதேன்னு தமிழக அரசியல் சூடு பிடித்தது. அடுத்த வந்த உழைப்பாளி படத்துலயும், நேற்று கூலி, இன்னைக்கு நடிகன், நாளை.. அப்டின்னு பாதியில பஞ்ச் டயலாக்க முடிச்சு, செய்தியாளர்களுக்கான ஆல்டைம் ஃபேவரட் கண்டெண்ட் ஆக மாறினார் ரஜினி.
ரஜினி Vs ஜெயலலிதா:
நான் எப்போ வருவேன் எப்டி வருவேன்னு தெரியாது... ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன் அப்டின்னு அரசியல் எண்ட்ரீ தொடர்பா முத்து படத்துல ரஜினி பிள்ளையார் சுழி போட, 1996-ல் வெளிப்படையாகவே அரசியல் பேசினார். மணிரத்தினம் அலுவலகத்தில் நடந்த வெடிகுண்டு சம்பவம், திரைப்பட நகருக்கு ஜெ.ஜெ.நகர் என பெயர் வைத்ததற்கு எதிர்ப்பு என, ஜெயலலிதா ஆட்சியின் போது, அவருக்கும் ரஜினிக்கும் இடையேயான மோதல் நீடித்து வந்தது. அதன் உச்சகட்டமாக, ஜெயலலிதா திரும்பவும் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது" என அவர் சொன்ன கருத்து தான், அப்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க கூட்டணிக்கு கிடைத்த மாபெரும் வெற்றிக்கு முக்கிய காரணம் என இன்றளவும் அவரது ரசிகர்கள் சொல்வது உண்டு. ஆனால், 2001ம் ஆண்டு ஜெயலலிதா வெற்றி பெற்றபோது, நேரில் சந்தித்து தைரிய லட்சுமி என ரஜினி பாராட்டினார்.
ரஜினி Vs பாமக:
ஜெயலலிதாவை எதிர்த்த சூட்டோடு, 1998ம் ஆண்டு கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இஸ்லாமியர்கள் சம்மந்தப்பட்டிருக்க முடியாது என கூறி, பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தினார். இதுபோன்ற அடுத்தடுத்த அதிரடி பேச்சுகளால் ரஜினி ஒருநாள் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்ற எண்ணத்திலேயே, ரசிகர் மன்ற பணிகளில் அவரது ரசிகர்கள் ஈடுபட தொடங்கினர் என்பது தான் உண்மை. அதோடு, பாபா படத்தில் இருந்த புகைப்பிடிக்கும் காட்சிகள் காரணமாக, ரஜினி மற்றும் பாமகவிற்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது ரசிகர்கள் மற்றும் பாமகவின் தொண்டர்கள் இடையேயான மோதலாகவும் ஆங்காங்கே வெடித்தது. அதன் விளைவாக, 2004ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாமகவிற்கு எதிராக செயல்படும்படி, தனது ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் உத்தரவிட்டார். ஆனாலும், அந்த தேர்தலில் பாமக போட்டியிட்ட 6 தொகுதிகளிலும் அக்கட்சி வெற்றி பெற்றது.
அரசியலுக்கு வருவேன் - ரஜினி
காலாங்கள் உருண்டோட ஆங்காங்கே அரசியல் நெடி வீசும் அரசியல் வசனங்களை பேசிய ரஜினி, 2012ம் அண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின் மீண்டு வந்த அவர், நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன், ரசிகர்களின் பிரார்த்தனைக்கு ஏதாவது செய்ய வேண்டும், ஆனால் அது என கையில் இல்லை என உணர்ச்சிவசப்பட்டார்.
ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கையிலேயே மேலும் 5 ஆண்டுகள் உருண்டோடியது. 2017ல் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது காலத்தின் கட்டாயம்... வரப்போற சட்டமன்றத் தேர்தல்ல தனிக் கட்சி ஆரம்பிச்சு, 234 தொகுதியிலேயும் நாம போட்டியிடுறோம்'' என சொல்லவும் அரங்கமே அதிர்ந்தது. 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்து, ``கட்சி ஆரம்பிப்பது உறுதி, தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என்றார். அடுத்தடுத்து அரசியல் சூடு பறக்க பல அறிக்கைகளையும், டிவீட்களையும் வெளியிட்டார்.
இப்ப இல்லன்னா எப்பவும் இல்லை - ரஜினி
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை காண சென்றபோது, நீங்கள் யார் என ஒருவர் கேட்ட கேள்வி ரஜினியை நிலைகுலைய செய்தது. அதே வேகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, மக்கள் எல்லாத்துக்கும் போராட்டம் போராட்டம்னு போனா... தமிழ்நாடு சுடுகாடா மாறிடும்" என்று ஆவேசமாகப் பேசி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அடுத்த சில மாதங்களில், முதலமைச்சர் பதவி எனக்கு வேண்டாம், மக்கள் மத்தியில் எழுச்சி வந்த பிறகு அரசியலுக்கு வருவேன் என பேசி அவரது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தினார். துவண்டு கிடந்த ரசிகர்களை ஊக்குவிக்க மீண்டும் ரஜினியிடம் இருந்து ஒரு அறிக்கை வந்தது. அதில், தமிழக மக்களுக்காக உயிரே போனாலும் நான் சந்தோஷப்படுவேன். அரசியல் மாற்றம் ரொம்பக் கட்டாயம். அது காலத்தின் தேவை. அது இப்போ இல்லைன்னா... எப்பவும் இல்லை. எல்லாத்தையும் மாத்தணும் என கூறி, ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
ரஜினி எழுதிய முடிவுரை:
அதைதொடர்ந்து, அண்ணாத்தா படத்தில் ஈடுபட்டு இருந்தபோது ரஜினிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதிலிருந்து மீண்ட பிறகு வெளியிட்ட அறிக்கையில், பிரசாரத்தின்போது என் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டால், என்னை நம்பி என்கூட வந்து, என்னுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் பல சிக்கல்களையும் சவால்களையும் எதிர்கொண்டு மனரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் பல துன்பங்களைச் சந்திக்க நேரிடும். இல்லை, நான் கொடுத்த வாக்கைத் தவற மாட்டேன். நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி, இப்போது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலு விதமா என்னைப் பற்றிப் பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என்கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. ஆகையால், நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என, தொடங்கப்படாத தனது அரசியல் பயணத்திற்கு முடிவுரையை எழுதினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.