நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் விக்ரம் திரைப்படத்தின் “பத்தல.. பத்தல..” பாடலில் மத்திய அரசை விமர்சிப்பது போன்று எழுதப்பட்டுள்ள வரிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விக்ரம். ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் பாடல் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என்று கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். அதன்படி, அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள “பத்தல பத்தல” என்ற பாடல் வெளியானது.






பொதுவாகவே கமல்ஹாசனின் ஓப்பனிங் பாடல்களில் அரசியல் கருத்துகளோ அல்லது சமூக கருத்துகளோ இடம்பெறும். அதே போன்றே இந்த பாடலிலும் மத்திய, மாநில அரசுகளை விமர்ப்பது போன்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன.






காதலா காதலா திரைப்படத்தில் வந்த “காசு மேலே.. காசு வந்து” பாடல் பாணியில் வெளியாகியுள்ள இந்த “பத்தல பத்தல” பாடலில் ஏகப்பட்ட உள்குத்துகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக கஜானாலே காசில்லே.. கல்லாலயும் காசில்லே.. காய்ச்சல் ஜொரம் நெறய வருது தில்லாலங்கடி தில்லாலே என்ற வரிகளில்,  மத்திய, மாநில அரசுகளிடமும் நிதி இல்லைய், வியாபாரியின் கல்லாப் பெட்டியிலும் காசு இல்லாத அளவிற்கு நிதி நிலமை மோசமாகியிருக்கிறது என்று குறிப்பிடுகிறார். அதோடு, ஒன்றியத்தின் தப்பாலே.. ஒன்னியும் இல்ல இப்பாலே என்ற வரிகள் இடம்பெறுகிறது. மத்திய அரசை தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசு என்று தற்போது குறிப்பிட்டு வருகிறது. ஒன்றிய அரசின் தவறுகளால், முன்பு இருந்த எதுவும் இப்போது இல்லை என்ற பொருளில் இந்த வரிகள் எழுதப்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர்.




"சாவி இப்போ திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே" என்ற வரிகளில் சாவி இப்போ திருடன் கையில் என்று யாரை கமல்ஹாசன் குறிப்பிடுகிறார் என்ற விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், "ஏரி கொளம் நதிய கூட ப்ளாட்டு போட்டு வித்தாக்கா.. நாறிபுடும் ஊரு சனம் சின்ன மழை வந்தாக்கா.." என்ற வரிகளில் அரசு மட்டுமல்லாது பொதுமக்களுக்கும் சேர்த்து டபுள் கொட்டு வைத்திருக்கிறார் கமல்ஹாசன்.




"குள்ள நரி மாமு.. கெடுப்பதிவன் கேமு" என்ற வரிகளில் தன் கட்சியில் இருந்து வேறு கட்சிக்கு மாறியவரை குறிப்பிடுகிறாரா? என்றும் விவாதித்து வருகின்றனர்.


“டேய்.. பட்டி டிங்கரிங் செய்யாத.. கெட்ட பொம்பளய நம்பி.. ஏமாந்து புடாத..” என்ற வரிகளுக்கு பெண்கள் மத்தியில் எதிர்ப்பு எழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Also Read | Pathala Pathala Song Lyrics: "ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே.." :வைரலாகும் கமலின் வரிகள்..