நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் தனது மனைவியை நினைத்துக் கண் கலங்கியது அனைவரையும் நெகிழச் செய்தது.


ஆயுஷ்மான் குரானா நடிப்பில், கடந்த 2019-ம் ஆண்டு இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'ஆர்டிக்கிள் 15' திரைப்படம், தமிழில் 'நெஞ்சுக்கு நீதி' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.


தமிழில் இந்தப் படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க, உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திபு நிணன் தாமஸ் இசையமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


இந்த திரைப்படம் வருகிற 20-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் நெஞ்சுக்கு நீதி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த திரைப்படத்தின்  ட்ரெய்லர் தற்போது வைரலாகி வருகிறது.


விழாவில் அருண்ராஜா காமராஜ் பேசியதாவது: ”இந்தப் படத்தைப் பற்றி நிறைய பேசணும்னு தோணுது. ஆனா பேச முடியவில்லை. படத்திற்காக ஒட்டுமொத்த டீமும் அவ்வளவு எஃபர்ட் போட்டிருக்கோம். படம் நல்லா வந்திருக்கு. நீங்கெல்லாம் பாருங்க. இந்தப் படம் வெற்றி பெற்றால் அதில் சிந்துவோட... என்று சொல்லி கண்கலங்கி வார்த்தைகளை விழுங்கினார் இயக்குநர் அருண்ராஜா காமராஜ். பின்னர் தன்னுடன் பணியாற்றிய உதவி இயக்குநர்கள் அனைவரையும் மேடைக்கு வருமாறு அழைத்தார். எல்லோரும் மேடைக்கு வர குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.




சிந்துவுக்கு என்னாச்சு..
அருண்ராஜ் காமராஜின் மனைவி சிந்துவுக்கு என்னாச்சுன்னு தெரியாதவர்களுக்காக.. அருண்ராஜ் காமராஜ், சிந்துஜாவை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இயக்குநர் ஆசையில் வாய்ப்புகளுக்காக முயற்சித்துக் கொண்டிருந்த அருண்ராஜாவுக்கு தங்களின் மகளை திருமண முடித்துவைக்க சிந்துஜாவின் வீட்டில் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. கடுமையான எதிர்ப்புக்கு இடையே இந்த காதல் ஜோடி கரம் பிடித்து இணைந்தது. அருண்ராஜா காமராஜின் முதல் படம் கனா. அந்தப் படத்தின் பிரெஸ் மீட்டில் சிந்துஜா சிந்திய கண்ணீர் ஆனந்தக் கண்ணீரின் இலக்கணம் என்று அப்போது எல்லோராலும் பேசப்பட்டது.


அழகான வாழ்க்கையில் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருந்த அருண்ராஜா காமராஜ், சிந்துஜா வாழ்வில் கொரோனா புகுந்தது. இருவருக்குமே கொரோனா தொற்று ஏற்பட இருவரும் மருந்த்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிந்துஜாவுக்கு தீவிர மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு மே 17 சிந்துஜா மறைந்தார். அதன் பின்னர் அருண்ராஜா காமராஜ் மிகவும் நொறுங்கிப் போனார். தன் காதல் மனைவியை நினைத்து அவர் நெஞ்சுக்கு நீதி மேடையில் கண்கலங்கினார்.