2006-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'போக்கிரி' படம் 2007ம் ஆண்டு தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. பிரபுதேவா ஒரு சிறப்பான நடன கலைஞர் என்பது சின்ன குழந்தைக்கு கூட தெரியும் ஆனால் அவருக்குள் இப்படி ஒரு திறமை உள்ளதா என அனைவரையும் ஆச்சரியத்தில் திகைக்க வைத்து ஒரு இயக்குனராக தனக்கென ஒரு முத்திரையை பதித்த ஒரு திரைப்படம் 'போக்கிரி'. இப்படம் வெளியாகி இன்றுடன் 16 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த தருணத்தில் அப்படம் குறித்த நினைவலைகள்.

  



புதுமையான டிஷ் :


பிரபு தேவா இயக்கத்தில் வெளியான இப்படத்தில் இளைய தளபதி விஜய், வடிவேலு, அசின், நெப்போலியன், ஸ்ரீமன், நாசர், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர். வழக்கமான போலீஸ் - ரவுடி கான்செப்ட்தான் இப்படத்திலும் கையாளப்பட்டது என்றாலும் சற்று வித்தியாசமாக மாவை அரைத்து புதுமையான டிஷ்ஷாக பரிமாறியிருந்தது ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றது. படத்தில் சும்மா புகுந்து விளையாடி  இருந்தார்கள் விஜய், அசின், நெப்போலியன் மற்றும் நாசர். களத்தில் இறங்கி ஒருவருக்கொருவர்  சரிசமாக நடிப்பில் கலக்கியிருந்தார்கள். 


நம்ம விஜய்யா இது ? 


விஜய் முதல் முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம். வழக்கமான விஜய்யை பார்ப்பதை விடவும் சற்று வித்தியாசமாக இப்படத்தில் காணப்பட்டார். அவருடைய என்ட்ரியே சூப்பராக இருந்தது. இப்படத்தில் விஜய்யின் 'நான் ஒரு தடவ முடிவு பண்ணிட்டேனா அப்புறம்  என் பேச்ச நானே கேக்க மாட்டேன்' என்ற பஞ்ச் டயலாக் இன்றும் விஜய் ரசிகர்களின் ஃபேவரட் டயலாக். 







எப்பொழுதும் போல் நாசரின் மிடுக்கான ஸ்ட்ரிக்ட்டான நடிப்பு சூப்பர். கிளைமாக்ஸ் காட்சியில் டி.எஸ்.பி. சத்தியமூர்த்தி ஐ.பி.எஸ் என அவர் கம்பீரமாக கொடுக்கும் இன்ட்ரோ அப்படியே பார்வையாளர்களை புல்லரிக்க செய்தது. நண்பராக ஸ்ரீமன் நடிப்பும் கனகச்சிதமாக இருந்தது. 


நடிகர்களுக்குள் போட்டி : 


அசின் பர்ஃபெக்டா அந்த கதாபாத்திரத்தில் பொருந்தி இருந்தார். குறும்பு  தனமான நடிப்பு என்றாலும் சரி சீரியஸ் காட்சி என்றாலும் சரி ஸ்ட்ரெயிட்டா சிக்ஸர் அடித்தார். அடுத்தாக அப்லாஸ் வாங்கியது நடிகர் நெப்போலியனின் அபாரமான டைலாக் டெலிவரி. குறிப்பாக பத்திரிகையாளர்கள் உடன் நடைபெறும் காட்சி மிகவும் சிறப்பு. வில்லனாக நடித்திருந்தாலும் பிரகாஷ்ராஜின் காமெடி ரசிக்கும் படி இருந்தது அவருக்கே உண்டான ஸ்டைல். 


படத்தின் பிளஸ் பாயிண்ட் : 


அவசியம் சொல்லியாக வேண்டிய ஒரு கதாபாத்திரம் பாடி சோடா வடிவேலு. மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு ஏராளமான கன்டென்ட் கொடுத்த ஒரு திரைப்படம். சுட்டும் விழி சுடரே பாடலுக்கு அசினுடன் வடிவேலு ஆடிய நடனம் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்து. போக்கிரி படத்திற்கு  நடனமும் , இசையும் கூடுதல் பலம் சேர்த்து இருந்தது. மணிஷர்மாவின் இசையில் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட். ஒரு சில நெகட்டிவ் படத்தில் இருந்தாலும் பொங்கல் ரிலீஸ் படமாக வெளியான இப்படம் ஒரு போக்கிரி பொங்கலாகவே அமைந்தது.