நடிகர் விஜய்யை புகழ்ந்து பிரதமர் மோடி பாடுவது போன்ற வீடியோ ஒன்று கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளவர் விஜய். தளபதி என அன்போடு ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் தான் இன்றைய நிலையில் தமிழ் திரையுலகின் நம்பர் 1 நடிகராக வலம் வருகிறார். விஜய் கடைசியாக கடந்தாண்டு ரிலீசான லியோ படத்தில் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்ற நிலையில் அடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் the greatest of all time என்ற படத்தில் நடித்து வருகிறார். 


இதனிடையே கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக நடிகர் விஜய் அறிவித்தார். நீண்ட காலமாக அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பேச்சுக்கள் எழுந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே விஜய்யின் செயல்பாடுகள் அதை உறுதி செய்யும் வண்ணம் இருந்தது. இதனிடையே விஜய் கட்சி ஆரம்பித்தது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு சென்றது. 


விஜய் தன் கட்சி தொடர்பான அறிக்கையில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவும் இல்லை, போட்டியும் இல்லை என தெளிவாக சொல்லிவிட்டார். மேலும் 2026 தமிழ்நாட்டில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு எனவும் கூறியுள்ளார். அதேசமயம் இன்னும் ஒரு படம் நடித்து விட்டு சினிமாவில் இருந்து விலகுவேன்,முழுநேர மக்கள் பணியில் ஈடுபடுவேன் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 






விஜய்யின் அரசியல் வருகை ஆதரவையும் எதிர்ப்பையும் பெற்றுள்ளது. அதேநேரம் அவர் சினிமாவில் நடிக்க மாட்டார் என்ற தகவல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் முழு வீச்சில் சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு தொகுதியிலும் உறுப்பினர்களை சேர்க்க தீவிரமாக பணியாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பதே இலக்கு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் AI தொழில்நுட்பத்தில் பிரதமர் மோடி நடிகர் விஜய்யை புகழ்ந்து பாடும் வீடியோ கடந்த சில தினங்களாக ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. அதில் “தளபதி படம் வந்தால் அரசாங்கம் பயப்படும்.. தளபதி வந்தால் தான் தமிழ்நாடே உருப்புடும்.. எல்லாருக்கும் அதிர்ச்சி.. அண்ணனோட வளர்ச்சி” உள்ளிட்ட வரிகள் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். 


உண்மையில் இந்த பாடல் 2019 ஆம் ஆண்டு விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு மெட்ராஸ் மிரன் பாடல் வரிகளில் கானா சுதாகர் பாடிய “MAN OF THE MASS” என்ற பாட்டு தான் மோடி குரலில் மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க: 18 Years of Thambi: நடிக்க மறுத்த மாதவன்.. திசை மாறிய சீமானின் வாழ்க்கை.. தம்பி படத்தால் வந்த சோதனை