நடிகர் மாதவன் - இயக்குநர் சீமான் கூட்டணியில் உருவான தம்பி படம் வெளியாகி இன்றோடு 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இயக்குநருமான சீமானின் இயக்கத்தில் மாதவன், பூஜா, வடிவேலு, சுமித்ரா, பிஜூ மேனன், வினோத் ராஜ் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான படம் “தம்பி”. இந்த படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். சாக்லேட் பாயாக நடித்து வந்த மாதவன் வாழ்க்கையில் தம்பி படம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இதன்பிறகு ஏராளமான ஆக்ஷன் படங்களில் மாதவன் நடித்தார்.
இப்படியான நிலையில் தம்பி படம் வெளியாகி இன்றோடு 18 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இப்படம் உருவானதை நேர்காணல் ஒன்றில் சீமான் பேசியிருப்பார். அதில், “தம்பி படம் உருவானதே போராட்டம் தான். அந்த கதையை எல்லா ஹீரோவிடமும் சொன்னேன். ஆனால் நடிக்க தயங்குகிறார்கள். அப்போது நடிகர் மனோபாலா என்னை அழைத்தார். அப்போது தம்பி பட கதையை சொன்னதும், இதுல ஏன்டா யாரும் நடிக்க மாட்டேங்குறாங்கன்னு புலம்பினார். பின்னர் சத்யஜோதி தியாகராஜனை சந்தித்து தம்பி படம் பற்றி சொன்னார். அவரும் அழைத்து வர சொல்லி கதை கேட்டார். நல்லாருக்குது, ஏன் யாரும் நடிக்க மாட்டேங்கிறார்கள் என தியாகராஜன் சொல்கிறார். நான் ஸ்ரீகாந்தை கேட்டேன். ஒருநாள் காலை 7 மணிக்கு தியாகராஜன் போன் பண்ணி மாதவன் நடித்தால் எப்படி இருக்கும் என கேட்டார்.
நான் எதுனாலும் ஓகே என சொன்னேன். அப்ப மாதவன் ஆய்த எழுத்து படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். முதலில் 2 நாட்கள் டைம் கொடுங்க, நான் கதை கேட்கிறேன் என சொன்னவர் அன்று மதியமே கதை சொல்ல அழைத்தார். நான் கதை சொல்லி முடித்ததும் மாதவனுக்கு ரொம்ப பிடித்தது. ரன் படத்துக்குப் பின் கதை கேட்டு முடித்ததும் நடிக்க முடிவு செய்த படம் இதுதான் என ஒப்புக்கொண்டார். ஆனால் ரூ.1 கோடி சம்பளம் கேட்டு பிடிவாதமாக இருந்தார். அது மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியது. கதை தியாகராஜனிடம் இருந்து ஆர்.பி.சௌத்ரியிடம் சென்றும் மாதவன் சம்பளம் பிரச்சினை தீரவில்லை. அதன்பிறகு டாக்டர் முரளி மனோகரனிடம் படம் சென்றது.
மாதவன் நடிப்பை கண்ணாடி மாதிரி பிரதிபலிப்பார். தம்பி படத்துக்குப் பின் பகலவன் படத்தின் கதையை மாதவனிடம் சொன்னேன். ஆனால் மறுபடியும் கனமான ஒரு கதையில் நடிக்க வேண்டுமா என கேட்டார். அந்த கதையில் மாதவன் நடித்திருந்தால் என் வாழ்க்கையை மாறியிருந்து இருக்கும். அப்படம் தம்பி மாதிரி இரண்டு மடங்கு இருக்கும்” என சீமான் தெரிவித்திருப்பார். தம்பி படத்துக்குப் பின் மாதவன் - சீமான் கூட்டணி வாழ்த்துகள் என்ற படத்தில் இணைந்தனர். ஆனால் அப்படம் படுதோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.