கடந்த 1995 ஆம் ஆண்டில் ஓசோன் படலத்தை கண்காணிக்கும் வகையில் ஒரு செயற்கைகோளை ஐரோப்பா விண்வெளி ஆய்வு நிறுவனம் விண்ணில் செலுத்தியது. ஈ.ஆர்.எஸ் கிராண்ட்பாதர் என்ற விண்கலனை விண்ணில் செலுத்தி ஐரோப்பா நிறுவனம் கட்டுப்படுத்தி செயல்பாட்டில் வைத்திருந்தது.
பூமியை கண்காணிக்க தற்போது பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை போல் இல்லாத வகையில் உருவாக்கிய முதல் அதிநவீன கண்காணிப்பு தளங்களில் இதுவும் ஒன்றாகும். பல ஆண்டுகள் செயல்பாட்டில் இருந்த இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதனையடுத்து அந்த செயற்கைக்கோள் அதன் சுற்றுவட்டார பாதையில் இருந்து விலகியுள்ளது. இதனால் கிரான்பாதர் செயற்கைக்கோளின் உடைந்த பாகங்கள் பூமியின் மீது விழும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த மாதம் இறுதிக்குள் இது பூமியில் விழலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
இரண்டு டன் எடை கொண்ட செயற்கைக்கோள்களில் பெரும்பாலானவை கீழே விழும் போது எரிந்து விடும் என்று இந்த செயற்கைக்கோளை உருவாக்கிய ஐரோப்பா விண்வெளி நிறுவனம் (ESA) தெரிவித்துள்ளது. மேலும், செயற்கைக்கோள்கள் பூமியை நோக்கி இறங்கும்போதும், அவை வளிமண்டலத்தில் நுழையும் போதும் ஏற்படும் கடுமையான வெப்பத்தை தாங்கக்கூடிய சில வலுவான பாகங்கள் இருக்கலாம், ஆனால் அவை மக்கள் வசிக்கும் பகுதிகளைத் தாக்கும் வாய்ப்புகள் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது செயற்கைக்கோள் கட்டுபடுத்த முடியாது என்பதால் அது எங்கே விழும் என்று யூகிக்க முடியாது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதனை கடலில் விழ வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில பாகங்கள் வளிமண்டலத்தை தாண்டி பூமியில் விழும் வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பா விண்வெளி நிறுவனத்தின்படி, ERS-2 மற்றும் ERS-1 செயற்கைக்கோள்கள் உலகின் மிக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களாக இருந்தன. இதனால் தான் இரண்டு செயற்கைக்கோள்களும் " கிராண்ட் பாதர்” என அழைக்கப்படுகிறது. இந்த செயற்கைக்கோள்கள் நிலம், பெருங்கடல்கள் மற்றும் துருவத்தில் இருக்கும் தகவல் மாற்றங்கள் போன்ற பூமியைப் பற்றிய மதிப்புமிக்க தரவுகளை வழங்கின. கடுமையான வெள்ளம் மற்றும் பூகம்பங்கள் போன்ற இயற்கை பேரழிவுகளை கண்காணிக்கவும், காலநிலை நெருக்கடி குறித்த மதிப்புமிக்க தரவுகளை வழங்கவும் அவை பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 16 ஆண்டுகள் சேவைக்கு பின் ஆயுட்காலம் முடிந்து சுற்றுப்பாதை விட்டு விலகியுள்ளது. கிராண்ட்பாதர் செயற்கைக்கோளில் இருந்து கிடைத்த தரவுகள் சுமார் 4,000 அறிவியல் வெளியீடுகளை உருவாக்கியதோடு, 5,000 க்கும் மேற்பட்ட திட்டங்களை வகுக்க உதவி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.