தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவரும் பாடல் மூலம் பாடகியாக வலம் வருபவர் சின்மயி. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு கவிஞர் வைரமுத்து மீது மீடூ புகார் தெரிவித்தார். வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தது திரையுலகில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தப் புகார் தெரிவிக்கும் முன்பு வரை சினிமாவில் முன்னணி பாடகியாக கோலோச்சி வந்த சின்மயிக்கு, மீ டூ புகாருக்குப் பின் யாருமே பட வாய்ப்பு தரவில்லை. மேலும், அவரை டப்பிங் யூனியனில் தமிழ் படங்களுக்கு டப்பிங் பேச தடை விதித்தனர்.
இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள சின்மயி கடந்த 8 ஆண்டுகளாக போராடி வருகிறார். இந்நிலையில், சின்மயி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பெண் செய்தியாளர் ஒருவர் சின்மயிடம் வைரமுத்து குறித்து கேள்வி எழுப்பியதும், கடும் கோபமடைந்த சின்மயி, இப்ப எதற்கு அவரை பத்தி என்னிடம் கேட்டீங்க. என்கிட்ட வைரமுத்து குறித்து தான் பேச வேண்டுமா. இந்த கேள்வி மூலமா என்னை ட்ரிக்கர் செய்து நான் கோபமடைந்து பதில் தரணும் அதைத்தான் எதிர்பாக்குறீங்க. நீங்களும் ஒரு பெண்தான், நீங்களே இப்படி கேள்வி கேட்பது எனக்கு அதிர்ச்சியாக இருக்கு என பதில் அளித்தார்.
மேலும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி வரும் தூய்மைப்பணியாளர்களை சந்தித்து சின்மயி ஆதரவு தெரிவித்திருந்தார். இதுகுறித்த கேள்விக்கும் பதிலளித்த அவர், நான் ட்விட்டரில் இருக்கும் போது தூய்மைப்பணியாளர்கள் போராட்ட வீடியோவை பார்த்தேன். அதில் பெண்கள் அதிகம் இருந்தார்கள். தன்னுடைய குடும்பத்திற்காக வெயில், மழை பார்க்காம குப்பை அள்ளுறாங்க. இரவு நேரத்தில் கண் முழித்து கஷ்டப்பட்டு இருக்காங்க. முதல்வர் சொன்னதை செய்வார் நம்புறேன். அவங்க தங்களுடைய வாழ்க்கைக்காக போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் தான் போய் அவர்களை பார்த்தேன் என சின்மயி தெரிவித்தார்.