இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டாராக உலா வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கூலி. இந்த படம் சுதந்திர தின கொண்டாட்டமாக வரும் 14ம் தேதி வெளியாகிறது.
டிக்கெட் விற்பனையில் கூலி:
ரஜினிகாந்த், சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் மற்றும் அமீர்கான் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவு கடந்த 8ம் தேதி தொடங்கியது.
வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என 4 நாட்களுக்கு பல தியேட்டர்களில் கூலி படத்திற்கான டிக்கெட் முன்பதிவு விற்றுத் தீர்ந்துள்ளது. கூலி படம் வெளியாகும் அதே நாளில் ஹ்ரித்திக் ரோஷன் - ஜுனியர் என்டிஆர் நடிக்கும் வார் 2 படமும் வெளியாகிறது.
பாலிவுட்டிலும் ரஜினி ஆதிக்கம்:
தமிழில் லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸ் போல, இந்தியில் யஷ்ராஜ் யுனிவர்ஸ் உள்ளது. அந்த வரிசையில் வார் படத்தின் 2ம் பாகமாக வெளியாகியுள்ள இந்த படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ஹ்ரித்திக் ரோஷன் இருப்பதால் இந்தியிலும், ஜுனியர் என்டிஆர் இருப்பதால் தெலுங்கிலும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.
ரஜினிகாந்த படம் என்றால் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுமைக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் பாலிவுட்டிலும் கூலிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
இதனால், இந்தி நடிகர் ஹ்ரித்திக் ரோஷனுக்கு சவால் அளிக்கும் விதமாக ரஜினிகாந்தின் கூலி படம் அமைந்துள்ளது. வார் 2 படத்தின் டிக்கெட் முன்பதிவிற்கு போட்டியாக கூலி படம் அமைந்துள்ளது. இதனால், பாலிவுட்டில் வார் 2 படத்திற்கு நிகரான வசூலை கூலி படம் பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திரா, தெலுங்கானாவிலும் அசத்தும் கூலி:
மேலும், ஆந்திரா, தெலங்கானாவின் மிகப்பெரிய நட்சத்திரமாக ஜுனியர் என்டிஆர் இருந்தாலும் ஆந்திராவிலும் ரஜினிக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருப்பதாலும், கூலியில் நாகர்ஜுனா நடித்திருப்பதாலும் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வார் 2 படத்தை காட்டிலும் கூலிக்கே மிகப்பெரிய எதிர்பார்பபு உண்டாகியுள்ளது.
வார் 2 மற்றும் கூலி ஆகிய இரண்டு படங்களிலும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கரான நாகர்ஜுனா மற்றும் ஜுனியர் என்டிஆர் வில்லனாக நடித்துள்ளனர்.