நெட்பிலிக்ஸ் நிறுவனம் வெளியிடும் ‛தி கிரே மேன்’(The Gray Man) என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்து வருகிறார் பிரபல நடிகர் தனுஷ். தற்போது அந்த படத்தில் இருந்து சில சுவாரசியமான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அக்ஷின் திரில்லர் தளத்தில் உருவாகும் இந்த திரைப்படம் கடந்த 2009ம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற மார்க் கிரேனே என்பவரின் The Gray Man என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோ மற்றும் அவரது சகோதரர் ஆண்டனி ரூஸ்ஸோ ஆகிய இருவரும் தான் தற்போது இந்த படத்தை இயக்குகின்றனர். கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி உலக அளவில் பிளாக் பஸ்டர் ஹிட்டான அவென்ஜர்ஸ் எண்டு கேம் திரைப்படத்தை இயக்கியது இவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 






இந்நிலையில் தற்போது நெட்பிலிக்ஸ் நிறுவனம் வெளியிடும் தி கிரே மேன் திரைப்படத்தில் பிரபல நடிகர்கள் கிறிஸ் இவான்ஸ் மற்றும் ரேயான் கோஸ்லிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அந்த படத்தில் ஒரு ஸ்பை வேடத்தில் தனுஷ் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. கடந்த 2018ம் ஆண்டு கென் ஸ்காட் இயக்கத்தில் வெளியான The extraordinary journey of the fakir என்ற படத்திற்கு பிறகு தனுஷ் நடிக்கும் இரண்டாவது ஹாலிவுட் திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. 


பிரபல நடிகர் தனுஷ் தனது அண்ணன் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் கடந்த 2002ம் ஆண்டு நடிகராக களமிறங்கினர். ஆரம்பக்கட்டத்தில் பல ஹீரோக்களை போல தனது உருவத்திற்காக கேலி செய்யப்பட்டார் தனுஷ். அதன் பிறகு 2006ம் ஆண்டு மீண்டும் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை படமும் கொக்கி குமாரு என்ற கதாபாத்திரமும் இவர் மேல் இருந்த சாயத்தை மாற்றியது. தனுஷ் தனது சிறந்த நடிப்பால் முன்னணி நடிகராக மாறினார். 


ஆடுகளம், மயக்கமென்ன, வடசென்னை, அசுரன் தற்போது கர்ணன் என்று பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் வித்தியாசமான பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளார் தனுஷ். காமெடி, குணச்சித்திரம், ஆக்சன் என்று பன்முக திறமைகொண்ட தனுஷ் 18 திரைப்படங்களை தயாரித்துள்ளார். அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா திரைப்படமும் ஒன்று. தற்போது ஹாலிவுட் தளத்தில் மீண்டும் கால்பதித்துள்ள தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் மற்றும் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.