நடிகர் விஜய் ஆண்டனி இயக்கி, நடித்துள்ள பிச்சைக்காரன் -2 படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இயக்குநர் சசி இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் “பிச்சைக்காரன்”. விஜய் ஆண்டனி  ஹீரோவாக நடித்த இப்படம் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இதன்பின்னர் விஜய் ஆண்டனி பல படங்களில் நடித்தாலும் அவரின் “பிச்சைக்காரன்” படம் போல எந்த படமும் இல்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இதற்கிடையில்  பிச்சைக்காரன் படத்தின் 2 ஆம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியானது. 


இந்த படத்தில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கவும் செய்துளார். பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பு மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. அந்த வகையில் கடந்த மாதம்  லங்காவி தீவில் நடந்த படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கினார். 




தொடர்ந்து பிப்ரவரி 2 ஆம் தேதி ட்விட்டரில் விஜய் ஆண்டனி பதிவு ஒன்றை வெளியிட்டார்.அதில், “அன்பு இதயங்களே.. நான் 90% குணம் அடைந்து விட்டேன். உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன.என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன்” என தெரிவித்திருந்தார். 


இதன்பின்னர் இந்த படத்தின் ஸ்னீக் பீக் ட்ரெய்லர் பிப்ரவரி 9 ஆம் தேதி  வெளியானது. மேலும் பிச்சைக்காரன் 2 படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வெளியாகும் என விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிச்சைக்காரன் 2 படம் முதல் பாகத்தை விட வித்தியாசமாக இருக்கும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர்.