இளைஞர்களை இந்திய ராணுவத்தில் பணி அமர்த்துவதற்காக, அக்னிபத் என்று இந்தியில் அழைக்கப்படும் ‘அக்னி பாதை’ என்ற புதிய திட்டத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதற்காக மத்திய அமைச்சரவை, கடந்தாண்டு ஜூன் 14 ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.


கொந்தளிப்பை ஏற்படுத்திய திட்டம்:


இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


அக்னி பாதை திட்டத்தின் கீழ் சேரும் வீரர்கள், அக்னி வீரர்கள் (அக்னி வீர்) என்று அழைக்கப்படுவார்கள். அக்னிபாத் திட்டம் மூலம், 17.5 வயது முதல் 21 வயது வரையிலான 45,000 இளைஞர்கள், நான்காண்டு பதவி காலத்துடன் ராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள். 


இந்த பதவி காலத்தில், அவர்களுக்கு 30,000 முதல் 40,000 ரூபாய் வரை ஊதியம் அளிக்கப்படும். அதுமட்டுமின்றி, மருத்துவ மற்றும் காப்பீட்டு பலன்கள் அவர்களுக்கு வழங்கப்படும். தற்போதைய கல்வித் தகுதி, உடற் தகுதி நடைமுறைகள் அப்படியே பின்பற்றப்படும்.


ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் இராணுவத்தில் சேவையாற்ற வேண்டும். அதன்பிறகு, ரூ.11 லட்சம் முதல் 12 லட்சம் வரை நிதி உதவியுடன் வெளியேற்றப்படுவார்கள். 25 விழுக்காட்டினர் மட்டுமே, இந்தியப் படையில் நிரந்தரப் பணி வாய்ப்பு பெறுவார்கள்.


இதனால், அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு கடந்தாண்டு டிசம்பர் 15ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று அதன் தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.


தேச நலன் சார்ந்த திட்டம்:


அனைத்து மனுக்களையும் நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. இரு தரப்பு வாதத்தை கேட்ட டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, "இந்தத் திட்டம் தேசிய நலனுக்காகவும், ராணுவ படைகளை சிறப்பு வாய்ந்ததாக உறுதி செய்வதற்காகவும் உருவாக்கப்பட்டது. அக்னிபாத் ஆட்சேர்ப்பு திட்டத்தில் தலையிட எந்த காரணமும் இல்லை" என தெரிவித்தது.


இது வீரர்கள் மத்தியில் போராடும் குணத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் துணிந்து செயல்படுவதை தடுக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். அதேபோல் இளைஞர்கள் 4 ஆண்டுகளுக்கு தங்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகும் என எதிர்ப்பு தெரிவித்தனர். 21 வயதில் வெளியேற்றப்படுகின்ற அந்த இளைஞர்களுக்கு, 12 ஆம் வகுப்பு தேர்வுச் சான்று இதழ் தரப்படும் என்கிறார்கள்.


ஆனால், அதே காலகட்டத்தில், கல்லூரிகளில் பயில்கின்ற இளைஞர்கள், 20 வயதில் பட்டப் படிப்பை முடித்து, 21 வயதில் ஓராண்டு உயர்கல்வியும் முடித்து இருப்பார்கள். 4 ஆண்டுகள் படைப்பயிற்சியை முடித்த இளைஞர்களுக்கு, அதன்பிறகு உயர்கல்வி என்பது எட்டாக் கனியாக ஆகி விடும் என்று இளைஞர்கள் தங்கள் குமுறல்களை வெளிப்படுத்தினர்.