உலகம் முழுக்க பலராலும் மிகவும் விரும்பிப் பார்க்கப்பட்ட சீரீஸ் “Game Of Throne". 


1996-ல் ஜார்ஜ் ஆர்.ஆர்.மார்ட்டின் என்பவர் எழுதிய நாவல், `A song of Ice and Fire.’ இந்த நாவலில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருக்கும். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒவ்வொரு பின்புலக் கதைகளும் உண்டு. இதில் வரும் கதாபாத்திரங்களை வாசகர்களை ரசிக்க வைத்துவிட்டு, அவர்களைக் கொன்று கதையை நகர்த்துவதுதான், எழுத்தாளரின் பாணி. இந்தக் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட சீரிஸ்தான், `கேம் ஆஃப் த்ரோன்ஸ்.’


டேவிட் பெனியோஃப் மற்றும் டி.பி.வெயிஸ் ஆகிய இருவரும்தான் இதன் கிரியேட்டர்ஸ். நாவலில் இருப்பதை அப்படியே படமாக்காமல், கதையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்திருப்பார்கள். `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ என்னும் `அரியணைக்கான விளையாட்டு.’ டைட்டில் சொல்லும் இந்த கருதான் கதைக்களமும். 1,000 வருடங்களுக்கு முன்பு அழிந்துவிட்டதாகச் சொல்லும் ஒயிட்வாக்கர்ஸ் மீண்டும் எங்கிருந்து வந்தார்கள்? எதற்காக வந்தார்கள்? டிராகன்கள் எவ்வாறு மீண்டும் உயிர் பெறுகின்றன? 700 அடியில் பெருஞ்சுவரை அமைத்து எதற்காக ராஜ்ஜியத்தைப் பாதுகாக்கிறார்கள்? இழந்த உரிமையை மீட்டெடுக்க ஒரு பெண் என்னவெல்லாம் செய்கிறார்? காதல், வன்மம், துரோகம், நட்பு, சோகம், மகிழ்ச்சி, இழப்பு, அருவருப்பு, குரோதம், கொடூரம் என எல்லாவற்றையும் கலந்த ஒரு காம்போதான் கேம் ஆஃப் த்ரோன்ஸ்.


இதில் ஜான் ஸ்னோவும், டிரியன் லேனிஸ்டரும், ஆர்யா ஸ்டார்க்கும் என ஒவ்வொருவரும் தனக்கென தனியிடத்தைப் பிடிக்கும் கதாபாத்திரங்கள்தான்.


கடந்த 2019-ஆம் ஆண்டு கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீசன் பல எபிசோடுகளை வெற்றிகரமாகக் கடந்து முடிவுக்கு வந்தது. அதைத் தாங்கிக்கொள்ள மனமில்லாத ரசிகர்கள், Change.Org பெட்டிஷன் போடுமளவுக்கு மனமுடைந்துபோனார்கள். ஏன் முடித்தீர்கள் என குழுவினரை திட்டவும் செய்தார்கள். தனது சமீபத்திய நேர்காணலில் அதற்கு பதிலளித்த பீட்டர் டிங்க்லேஜ், “ரசிகர்கள் தினமும் அந்த கதாபாத்திரங்களை பார்த்துவிட்டுத்தான் தூங்கிக்கொண்டிருந்தார்கள். அந்தப் புனைவின் டிராகன்கள் இருந்தன. அது முடிந்துவிட்டது மக்களே. அதை விட்டுவிடுங்கள்” என சமாதானம் சொல்லி இருக்கிறார். 


Game of Thrones சீரீஸ் 2011-ஆம் ஆண்டில் இருந்து 2019-ஆம் வரை ஒளிபரப்பானது. பீட்டர் டிங்க்ளேஜ் அவரது டிரியன் லேனிஸ்டர் கதாபாத்திரத்துக்காக 4 முறை எம்மீஸ் விருதைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


கதைகளும், அதில் உலவும் கதாபாத்திரங்களும் நம்மோடுதானே வாழ்கின்றன. அதை விட்டுவிடுவதும், மறந்துவிடுவதும் சுலபமில்லைதானே..


இறுதியில், எல்லாமே இங்கு கதைகள்தானே..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண