சமந்தா நடிப்பில் வெளியான 'த ஃபேமிலி மேன் 2' திரைப்படம் அதிகளவில் சர்ச்சையை ஈர்த்து வருகிறது. இந்தச் சூழலில் இது தொடர்பாக ஜெயசந்திர ஹாஸ்மி என்ற நபர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில், "The Family Man இரண்டாவது சீசனில் வெளிப்பட்டிருப்பது திட்டமிட்ட வன்மம் என நான் பார்க்கவில்லை. அது முழுமையறியாத ஒரு பொதுப்புத்தியின் வெளிப்பாடே. தென்னிந்தியர்களுக்கு ஆங்கிலப் புலமை இருக்காது, பாகிஸ்தானில் முஸ்லிம்கள் மட்டும்தான் இருப்பார்கள், அவர்கள் அனைவரும் தீவிரவாதிகளாகத்தான் இருப்பார்கள், உலகின் மற்ற நாடுகளில் நல்ல சினிமாக்கள் மட்டும்தான் வெளியாகிறது.. 


இப்படி விடுதலைப் புலிகள் மீது கடும் விமர்சனம் கொண்ட பலர் இன்னமும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே கூட! அவர்கள் சினிமாத்துறையில் இருந்து ஒரு படம் எடுத்தால் புலிகளை மாற்று பிம்பத்தில் தான் காட்டுவார்கள். அந்த விமர்சனங்களுக்கான அடிப்படையோ அதற்கான காரணங்களோ அவர்களிடம் இருந்தால் அதுவும் அந்த படைப்புகளில் வெளிப்படவே செய்யும். புனைவு என்று சொல்லப்பட்டாலும் ஃபேமிலி மேனில் வரும் தமிழீழ இயக்கத்தை நாம் புலிகளோடு தான் ஒப்பிடுவோம் என்பது அவர்களுக்கும் தெரியும். அதனாலேயே சீசன் முழுவதும் எங்குமே அவர்களை தீவிரவாதிகள் என்று குறிப்பிடாமல் Rebels என்றே குறிப்பிடுகிறார்கள். அதேபோல் அமைப்புக்கு எதிராக இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளின் கூட்டு சதியைப் பற்றியும், இலங்கை ராணுவத்தின் வன்கொடுமைகளைப் பற்றியும் கூட சொல்லப்படுகிறது. அவர்கள் அளவில் இதுதான் The Other Side. 


இதை வரலாறாக பார்க்குமளவிற்கு பார்வையாளர்கள் புரிதலற்று இருக்க மாட்டார்கள். இதன்மூலம் புலிகளுக்கு களங்கம் ஏற்பட்டுவிடுமென்றும் தோன்றவில்லை. இருவர் படத்தில் மோகன்லாலின் படத்தை தடைசெய்ய வேண்டுமென்று கேட்கும் கட்சிக்காரர்களிடம் பிரகாஷ்ராஜ் ‘ரெண்டரை மணி நேர படத்துக்கு பயப்படுற மாதிரியா நம்ம ஆட்சி இருக்கு. வரட்டும் வரட்டும்’ என்பார். நிஜமான வன்மத்துடன் புலிகளின் மேல் சாயம் பூசப்பட்டு படங்கள் எடுக்கப்பட்டாலும், அதனால் அவர்களுக்கு எந்த இழுக்கும் வராது என்று நம்புகிறேன். 




என்ன இன்னும் கொஞ்சம் மெனக்கிட்டு, ஈழப் போராட்டத்தின் அடிப்படை என்ன, ஏன் மக்களில் ஒரு பிரிவினரே போர்ப்படையாய் மாறி களத்தில் நின்றனர் என்பது குறித்த வசனங்களாவது இருந்திருக்கலாம். சென்ற பகுதியில் குற்றமற்ற ஒரு இஸ்லாமியனை தீவிரவாதி என்று முத்திரை குத்தி கொல்வதை காட்சிப்படுத்தியிருந்ததைப் போல, இங்கும் சில இடங்களில் மனிதம் பேசியிருக்கலாம். பாஸ்கரன் தம்பிக்காக மட்டுமே Retaliate செய்வதை மாற்றியிருக்கலாம். But again இது வரலாறு அல்ல. வரலாற்றுப் புனைவும் அல்ல. வெறும் புனைவுதான். நமக்கு அந்த போராட்டத்தின் மீது இருக்கும் பற்றுதலால் தோன்றுபவை. சமந்தா முதன்முதலில் ராணுவ உடை அணிந்து சபதமேற்கும் போது புல்லரிப்பதைப் போல!


புனைவை வரலாற்று  ஸ்திரத்தன்மையுடன் பார்க்க வேண்டுமா தெரியவில்லை. கர்ணனுக்கே கூட 90 கள் என்று போட்டிருந்தால் பிரச்சினை வந்திருக்காது இல்லையா? அப்போதைய அமெரிக்க எதிரிகள் ஜேம்ஸ்பாண்ட் பட வில்லன்களாகும் அளவிற்கு கூட இதில் உள்ளர்த்தம் இருக்கிறது என்று எனக்குத் தோன்றவில்லை. புனைவுப் பண்டத்திற்கு தொட்டுக் கொள்ளும் ஊறுகாய்க் கதைகள் இப்படியாகத்தான் இருக்கும். புனைவின் ஒரு சமூகத்தையோ ஒரு சாராரையோ குறித்த மடைமைகளை ஏற்றும் பிற்போக்குத்தனங்கள் வேறு. இது வேறு. 




சரி அப்போது என்ன செய்யலாம்? நிஜத்தை, வீரம் செறிந்த வரலாற்றை, நாம் எதிர்பார்க்கும் பிம்பத்தை, நாம் புனைவாக எடுக்கலாம். அதில் அத்தனையையும் சரி செய்யலாம். ஒன்றே ஒன்று. அது மிக சுவாரசியமான, மிக மிக விறுவிறுப்பான ஒரு புனைவாக இருந்துவிட வேண்டும். நாம் விரும்பாத ஒன்றையே ஒருவன் இத்தனை சுவாரசியமாக தரும்போது, நாம் விரும்பும் ஒன்றை நாம் எத்தனை சுவாரசியமாக தர வேண்டும்? உண்மை, வரலாறு என்பதெல்லாம் சுவாரசியக் குறைவிற்கான Justifications அல்ல. புனைவின் சுவாரசியம் மட்டுமே இந்த அரசியல் எதுவும் அறியாத ரசிகனைக் கூட கட்டிப்போடும். அப்படிப் போட்டபின்பு அவனுக்கு உண்மைகளை ஊட்டிக் கொள்ளலாம். உண்மை மட்டும் சொல்கிறேன் வா என்றால் கூடாரம் காலியாகத்தான் இருக்கும்" எனப் பதிவிட்டுள்ளார். 


மேலும் படிக்க: Premam Movie: பிரேமம் கிளைமேக்ஸில் இப்படி ஒரு ட்விஸ்ட் இருக்கா? ரசிகரின் கேள்வியால் வெளிவந்த உண்மை !