கடந்த 2015-ஆம் ஆண்டு அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி மற்றும் சாய்பல்லவி நடிப்பில் வெளியான திரைப்படம் “பிரேமம்”. இந்த படம் எடுக்கப்பட்டு 6 ஆண்டுகள் ஆனாலும் கூட இப்போது பார்த்தாலும் ரசிகர்களுக்கு, அதே “ஃபிரஸ் ஃபீல் “ கொடுக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. அந்த அளவுக்கு ரசனை மிகுந்த காட்சிகள் படத்தில் இடம்பிடித்திருக்கும். குறிப்பாக ஜார்ஜும், மலர் டீச்சரும் கண்களாலே பேசிக்கொள்ளும் காட்சிகளை நேர்த்தியாகவும், கலைநயத்துடனும் உருவாக்கியிருப்பார் இயக்குநர். இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு  படத்தின் இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரன் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் தனது படைப்புகள் குறித்து ரசிகர்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் கேளுங்கள், என்னால் முடிந்த அளவு பதிலளிக்கிறேன் என தெரிவித்திருந்தார். 

 

அப்போது ரசிகர் ஒருவர், உங்கள் படங்களில் அதிகமாக தமிழின் தாக்கம்  இருப்பதை காண முடிகிறது அதற்கான காரணம் என்ன என கேட்டிருந்தார் , அதற்கு பதில் அளித்த அல்ஃபோன்ஸ் “நான் சென்னையில் படித்தவன், அதனால் எனக்கும் தமிழுக்கும் ஒரு பலமான பிணைப்பு உண்டு“ என பதிலளித்துள்ளார். பின்னர் கமெண்ட்டில் கேள்வி கேட்ட தமிழ் ரசிகர் ஒருவர் “ பிரேமம் படத்தில் மலர் டீச்சருக்கு உண்மையாகவே மெமரி லாஸ் ஆனதா, இல்ல ஜார்ஜ் திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லாம பொய் சொன்னாங்களா? , அப்படி மெமரி லாஸ் ஆகியிருந்தால், மலருக்கு நினைவு திரும்பியது , ஜார்ஜுக்கு தெரியுமா தெரியாதா ?!” எனக்கேட்டிருந்தார்.

 


 

அதற்கு பதிலளித்த அல்ஃபோன்ஸ் புத்திரன் “மலருக்கு மெமரி  லாஸ் ஆனது உண்மைதான். மலருக்கு நினைவு திரும்பியது ஜார்ஜுக்கு தெரியும், ஆனால் அது டயலாக்காக இடம் பெற்றிருக்காது.  மலர் ஜார்ஜின் திருமணத்தில், “ஜோடி சூப்பர்“ என சைகையின் மூலம் தெரிவித்திருப்பார். அப்போது பின்னணி இசை மூலம் மலருக்கு நினைவு திரும்பியதை விளக்கியிருப்போம்" என பதிலளித்துள்ளார். அல்ஃபோன்ஸ் புத்திரன் தற்பொழுது “பாட்டு “ என்ற புதிய படத்தை இயக்க உள்ளார். அதில் ஃபகத் பாசில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகியிருக்கிறார்.  கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு இந்த படத்திற்கான முழுக்கட்ட படப்பிடிப்புகள் மற்றும் வேலைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர அல்போன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிக்காகவும் கதை ஒன்று எழுதியிருப்பதாகவும், கொரோனா சூழல் காரணமாக அவரைச் சந்திக்க முடியவில்லை, நடக்கவேண்டும் என இருந்தால் நிச்சயம் நடக்கும் என தெரிவித்துள்ளார்.  ரஜினி ஓகே சொன்னால் நிச்சயம் அந்த படம்  வேற லெவல் காம்பினேஷனாகத்தானே இருக்கும்?!