டோலிவுட்டின் முன்னணி நடிகராக திகழ்பவர் பவன் கல்யாண். இவருக்கு, தெலங்கு திரையுலகைத் தாண்டி, தென்னிந்தியாவிலேயே அதிக ரசிகர் கூட்டம் உண்டு. பல நடிகர்கள் பிரபலமாகி தனக்கென ரசிகர் கூட்டத்தை வளர்த்தவுடன் அரசியலில் களமிரங்குவது போல, பவன் கல்யாணும் தற்போது அரசியலில் கால் பதித்துள்ளார். இவர், அரசியலில் களமிறங்கியுள்ள செய்தி பிறருக்கு பயத்தை கொடுப்பதை விட, அதற்காக இவர் கொடுக்கும் பில்ட்-அப்தான் பலரையும் வாயடைக்க செய்கிறது. 


தேர்தலுக்காக புதிய வண்டி:


தெலுங்கு ரசிகர்களால் ‘பவர் ஸ்டார்’ என்று அன்போடு அழைக்கப்படுபவர் பவன் கல்யாண். இவர், கடந்த 2014ஆம் ஆண்டில் ஜனசேனா என்ற கட்சியை ஆரம்பித்து, அதன் தலைவராகவும் இருந்து வருகிறார். திரையுலகில் மட்டுமன்றி, அரசியலிலும் தனக்கென ஒரு கூட்டத்தை சேர்த்துக் கொண்டிருக்கும் இவர் என்ன செய்தாலும் இவரது ரசிகர்கள் அதை வைரலாக்குவது உண்டு. அது போலத்தான், இவர் இப்போது புதிதாக ஒரு வண்டியை தயார் செய்துள்ளார். இந்த வண்டி, பவன் கல்யாண் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு ஏதுவான வண்டியாக உருவாகியுள்ளது. இந்த தேர்தல் வண்டிக்கு வராஹி என்று பெயரிடப்பட்டுள்ளது. 




வராஹியின் சிறப்பம்சங்கள் என்ன?


பச்சை நிறத்தில் இராணுவ வாகனம் போல காட்சியளிக்கும் வராஹி வண்டிக்குள் பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளது. அவை பின்வருமாறு, 



  • புதிய தொழில் நுட்பங்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ள வண்டி இது.

  • இந்த வண்டியிலிருந்து பவன் கல்யாண் பேசுவதை 1000 பேர் வரை கேட்கலாமாம். அதற்கு ஏற்றவாறு, இதில் புது விதமான ஒலிப்பெருக்கி பொருத்தப்பட்டுள்ளது. 

  • வராஹி வண்டியின் அனைத்து மூலைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

  • இந்த வாகனத்தில், இரண்டு பேர் உட்கார்ந்து பேச்சு வார்த்தை நடத்தும் அளவிற்கு இடம் உள்ளதாம். 

  • இந்த வாகனத்திற்கு வராஹி என்று பெயரிடப்பட்டுள்ளது. வராஹி என்பது துர்கை அம்மனின் மறு பெயராம்.  






இவ்வளவு முன்னேற்பாடுகளுடன் தேர்தலுக்காக தயாராகியுள்ள இந்த வண்டியை வீடியோ எடுத்து தனது சமூக வலைதள பக்கமான ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் பவன் கல்யாண். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. மேலும், தேர்தல் போருக்கு ரெடியாக வராஹி வண்டி என்ற கேப்ஷனையும், தனது பதிவோடு குறிப்பிட்டிருக்கிறார் பவன். 


சர்ச்சையில் சிக்கிய பவர் ஸ்டார்!


பவர் ஸ்டார் பவன் கல்யாண், நவம்பர் 5ம் தேதி ஆந்திரா மாநிலத்திற்கு செல்லும் நெடுஞ்சாலையில் காரின் மேலே அமர்ந்தபடி பயணம் செய்தார். அவர் தனது காரின் மேலே அமர்ந்து கொண்டிருக்க, பலர் அவர் காரை சுற்றி தொங்கியப்படி பயணித்தனர். அவர் செல்லும் காரை தொடர்ந்து அவரது ரசிகர்கள் பலரும் பைக்கில் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர். அவரது ஆதரவாளர்கள் கார் மற்றும் பைக்கில் அதிக வேகத்தில் பயணம் செய்ததோடு உற்சாகமாக கத்திக் கொண்டு பின்தொடர்ந்தனர். இதனால், பவன் கல்யாண் போக்கு வரத்து விதிமுறைகளை மீறிச்சென்றதாக சர்ச்சை எழுந்தது. இவரது இந்த செயலுக்கு, அரசியல் கட்சியை சேர்ந்த பலரும்  கண்டனம் தெரிவித்தனர். 


திரைப்பட ஸ்டண்ட் போல இருந்த அந்த கார் பயணத்தை 'போக்குவரத்து விதிகளை முற்றிலும் மீறிய செயல்’ என கூறி போலீசார் பவன் கல்யாண் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். வேகமாக வாகனம் ஓட்டியதற்காகவும், சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டை ஏற்படுத்தியதற்காகவும், பவன் கல்யாண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையின் தகவலின் படி பவன் கல்யாண் மீது ஐபிசி 336, 279 பிரிவுகளின் கீழ் மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் பிற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.