வசனங்கள், வார்த்தை ஜாலங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை வியக்க வைத்தவர்கள் பலர். சமூகம் சார்ந்த வசனகர்த்தாக்கள் பலர் இருந்தாலும் நடுத்தர குடும்பங்களில் உள்ள பிரச்சனை, உறவு சிக்கல்கள், உணர்வுகள் இவை அனைத்தையும் தனது வித்தியாசமான குரல் மொழியால், நேர்த்தியான வசன உச்சரிப்பால், யதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் கைதட்டல் பெற்றவர் விசு. அவரே இயக்கி நடித்த பல தனித்துவமான படங்கள் மூலம் தனி சிம்மாசனத்தில் அமர்ந்தவர். அவருக்கு நிகர் அவர் மட்டுமே. யாராலும் ஈடு செய்ய முடியாத ஒப்பற்ற கலைஞர் இயக்குனர் விசு.
புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த வள்ளல்:
அந்த வகையில் 1994ம் ஆண்டு இயக்குனர் விசு இயக்கத்தில் ஆனந்த் பாபு, வினோதினி, மோகினி, டெல்லி கணேஷ், லட்சுமி, எஸ்.எஸ். சந்திரன், விவேக், ஒய். விஜயா, மு. வரலட்சுமி, டி. வி. வரதராஜன், குமரிமுத்து உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் "பட்டுக்கோட்டை பெரியப்பா". இப்படம் வெளியாகி இன்றோடு 28 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இயக்குனர் விசு இன்று நம்மோடு இல்லை என்றாலும் அவரின் அற்புதமான படைப்புகள் மூலம் நமது நெஞ்சங்களில் நீங்காத ஒரு இடத்தில் என்றுமே நிலைத்து நிற்பார். பிரபலமான நடிகர்களுக்காக காத்து இருக்காமல் வளரும் நடிகர்கள் பலருக்கும் தனது படங்கள் மூலம் வாய்ப்பளித்து தனது ஆளுமையை தமிழ் சினிமாவில் விரிவுபடுத்தியவர். இயக்குனர் விசுவின் அனைத்து படங்களிலும் நாடக பாணி தென்படும். அனைத்து கதாபாத்திரங்களையும் உள்வாங்க கூடியவர். அது அவரின் பலவீனமாக இருந்தாலும் அவரின் பலமும் அதே தான். அவரின் பல படங்கள் வசூலை வாரி குவித்தது. குறிப்பாக சம்சாரம் அது மின்சரம் திரைப்படம் வெள்ளிவிழா கண்ட ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம்.
பட்டுக்கோட்டை பெரியப்பா செய்த காரியம் :
உறவு முறைகளை பெயராக வைத்து பல திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வெளிவந்துள்ளன. அந்த வரிசையில் வந்த "பட்டுக்கோட்டை பெரியப்பா" திரைப்படமும் ஒரு குடும்பத்தை சுற்றி நடக்கும் கதையே. அதிக வரதட்சணைக்கு ஆசைப்படும் பேராசை கொண்ட ஒரு மாமியாரால் நின்று போகிறது ஒரு பெண்ணின் திருமணம். அதை சரி செய்வதற்காக ஊரில் இருந்து வருகிறார் மணமகனின் பெரியப்பா விசு. பணம் முக்கியமா அல்லது பாசமும் உறவும் முக்கியமா என்பதை நெற்றியில் அடித்தாற்போல் மாமியாருக்கு புரிய வைக்கிறார் பட்டுக்கோட்டை பெரியப்பா. வரதட்சணையால் நின்று போன திருமணம் மீண்டும் நடைபெற்றதா? இல்லையா? அதற்கு பெரியப்பா எடுத்த முயற்சி என்ன என்பது தான் படத்தின் கதைக்களம். பொதுவாகவே குடும்பம் சம்பந்தமான படங்களை எடுக்கும் இயக்குனர் விசு படங்களுக்கு வரவேற்பு அதிகம் இருக்கும். அந்த வகையில் இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்து இருந்தார் தேனிசை தென்றல் தேவா.