கோவை காந்திபுரம் அருகே உள்ள சித்தாபுதூர் பகுதியில் பாஜக கோவை மாவட்ட தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு பாஜக நிர்வாகிகளும், கட்சி தொண்டர்களும் தினசரி வந்து செல்வது வழக்கம். பாதுகாப்பு காரணங்களுக்காக 24 மணி நேரமும் பாஜக அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்றிரவு இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பாஜக அலுவலகத்தை நோக்கி பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். அப்போது பெட்ரோல் குண்டு பாஜக அலுவலகத்திற்கு அருகே விழுந்தது. அதேசமயம் பெட்ரோல் குண்டு வெடிக்காததால், அசாம்பாவிதங்கள் மற்றும் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.




இதேபோல ஒப்பணக்கார வீதியில் வட மாநிலத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கு சொந்தமான மாருதி என்ற துணிக்கடை மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இதில் கடையின் முன்பாக இருந்த அட்டை மீது விழுந்து தீப்பற்றியுள்ளது. கடையில் இருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்ததால் அசாம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. கோவையில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியது. அப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவங்கள் குறித்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பெட்ரோல் குண்டு வீச்சிற்கான காரணம் மற்றும் இச்செயலில் ஈடுபட்டவர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.




இந்த நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் பா..க நிர்வாகிகள் கார் மற்றும் இந்து முன்னணி பொறுப்பாளர் ஆட்டோ கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் பா... நிர்வாகிகள் பொன்ராஜ், சிவா மற்றும் இந்து முன்னணி வார்டு பொறுப்பாளர் சரவணக்குமார் ஆகியோர் வசித்து வருகின்றனர். இன்று அதிகாலையில் அடையாளம் தெரியாத நபர்கள் பொன்ராஜ் மற்றும் சிவாவின் கார் கண்ணாடிகளை கோடாரியால் அடித்து உடைத்துள்ளனர். இதேபோல சரவணக்குமார் மற்றும் அவரது தந்தை வேணுகோபால் ஆகியோரது இரண்டு ஆட்டோ கண்ணாடிகளை உடைத்துள்ளனர். மேலும் கார் மற்றும் ஆட்டோக்களை டீசல் ஊற்றி எரிக்க முயற்சி செய்துள்ளனர். இது குறித்து தகவல் அறித்து வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.




இந்நிலையில் கோவையில் மேலும் ஒரு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை இரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் மோகன். இவர் பாஜக ரத்தினபுரி பகுதி மண்டல தலைவராக இருந்து வருகிறார். இவர் காந்திபுரம் நூறடி சாலையில் மோகன் வெல்டிங் அசஸரிஸ் என்ற கடை நடத்தி வருகிறார். இன்று காலை அவரது மகன் மகேந்திரன் வழக்கம் போல கடை திறக்க வந்துள்ளார். அப்போது கடையின் முன்பாக கண்ணாடிகள் சிதறிக் கிடந்துள்ளன. மேலும் கடையின் ஷட்டர் மீது பெட்ரோல் சிந்தியிருந்துள்ளது.




இதையடுத்து அக்கடையின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதும், அதிர்ஷ்டவசமாக அது வெடிக்காததால் அசாம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டதும் தெரியவந்தது. இது குறித்து மோகன் அளித்த தகவலின் பேரில் இரத்தினபுரி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இரண்டு முறை தனது கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்து இருப்பதாகவும், காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் இச்சம்பவம் நடந்திருப்பதாகவும் மோகன் தெரிவித்தார்.