பெரும் எதிர்பார்ப்புகளிடையே சிம்பு நடித்துள்ள 'பத்து  தல' படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி கவனமீர்த்துள்ளது.

Continues below advertisement

மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களைத் தொடர்ந்து நடிப்பில் முழு கவனம் செலுத்து நடித்து வரும் சிம்புவின் நடிப்பில் இந்த மாதம் வெளியாக உள்ள படம் ‘பத்து தல’

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை, சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கியுள்ளார். 2017ஆம் ஆண்டு கன்னட சினிமாவின் பிரபல நடிகரான சிவராஜ் குமார் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற மஃப்டி பட ரீமேக்காக உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஏஜிஆர் எனும் டான் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். 

Continues below advertisement

ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியானது. மேலும் இது குறித்து நேற்று ட்வீட் செய்திருந்த சிம்பு, ”டீசரை இப்போதுதான் பார்த்தேன், ரஹ்மான் பாயின் சம்பவத்துக்கு அனைவரும் தயாராகுங்கள் அவ்வளவு தான் என்னால் சொல்ல முடியும் . என் காட்ஃபாதருக்கு நன்றி” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

 

பத்து தல படம் சென்ற ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதியே வெளியானதாக முன்னதாககத் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் தொடர்ந்து படத்தின் வெளியீடு தள்ளிப்போன நிலையில், முன்னதாக படம் வரும் மார்ச் 30ஆம் தேதி வெளியாகுமென அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. 

மேலும் கடந்த பிப்ரவரி 3, நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய நம்ம சத்தம் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

பாடலாசிரியர் விவேக் இந்தப் பாடலைப் பாடியிருந்தார். இந்நிலையில் வரும் மார்ச் 18ஆம் தேதி பத்து தல படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாகவும், இந்த விழாவில் நடிகர் சூர்யா பங்கேற்கலாம் என்றும் இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.