நெடுஞ்சாலை, சில்லுனு ஒரு காதல் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்த 'பத்து தல' திரைப்படம் மார்ச் மாதத்தின் இறுதியில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. தமிழ்நாட்டில் மட்டும் 500 ஸ்க்ரீன்களில் வெளியான இப்படம் வெற்றிமாறனின் 'விடுதலை'படத்துடன் நேரடியாக களத்தில் இறங்கியது. இப்படத்தில் கெளதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், சந்தோஷ் பிரதாப், கௌதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி, அனு சித்தாரா, கலையரசன், டீஜே உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மணல் மாஃபியா டானாக ஏ.ஜி.ஆர் என்ற கதாபாத்திரத்தில் மிகவும் கெத்தாக, நடை உடை பாவனை தோற்றம் என அனைத்தையும் மாற்றி மாஸாக களம் இறங்கி இருந்தார் நடிகர் சிம்பு. ஸ்டுடியோ க்ரீன் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு இசையமைத்து இருந்தார் இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான்.
சிம்புவுக்கு ஹாட்ரிக் வெற்றி :
கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'முஃப்தி' படத்தின் தழுவலாக பத்து தல திரைப்படம் உருவானது என பரவலாக பேசப்பட்டது. ரீ மேக் படம் என்றாலும் அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உருவானது. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூலையும் குவித்தது. 40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் சுமார் 55 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் படத்தின் இடைவேளை வரை சிம்பு திரையில் வராதது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாகவே இருந்தது. மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களை தொடர்ந்து பத்து தல திரைப்படமும் நடிகர் சிம்புவிற்கு வெற்றிப்படமாக அமைந்து ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளது.
ஓடிடியில் வெளியாகும் பத்து தல :
திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிய பத்து தல திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக தயாராகிவிட்டது. அதன் அறிவிப்பு தேதி தற்போது வெளியாகி ரசிகர்களை மேலும் சந்தோஷப்படுத்தியுள்ளது. 'பத்து தல' திரைப்படம் ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகும் என்ற அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது அமேசான் நிறுவனம். கலவையான விமர்சனங்களை பெற்றாலும், கன்னட ஒரிஜினல் படம் அளவுக்கு பத்து தல படம் இல்லை என ரசிகர்கள் விமர்சனங்களையும் முன்வைத்தனர். திரையரங்கில் வெளியாகிய நான்கு வாரங்களில் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக தயாராகிவிட்டது 'பத்து தல' திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.