IPL 2023 MI vs PBKS:  


வார இறுதியான இன்றைய தினத்தின் இரண்டாவது லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் சாம் கரன் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி  பந்து வீச முடிவு செய்துள்ளது. 


நேருக்கு நேர்:


2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டது முதலே விளையாடி வரும் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள், இதுவரை 29முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் மும்பை அணி 15 முறையும், பஞ்சாப் அணி 14 முறையும் வெற்றி பெற்றுள்ளது. வான்கடே மைதானத்தில்  இரு அணிகளுக்கு இடையே மொத்தம் 9 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் மும்பை அணி ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற 5 போட்டிகளில், பஞ்சாப் அணி மூன்றிலும், மும்பை அணி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த புள்ளி விபரங்களை வைத்துப் பார்க்கும் போது பஞ்சாப் அணியின் கரம் வலுவாக இருப்பதாக உள்ளது. 


நடப்பு தொடரில் இதுவரை:


மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு தொடரில் 5 போட்டிகளில் விளையாடி, மூன்றில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. இதனிடையே, பஞ்சாப் அணியும் நடப்பு தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. 


மும்பை அணியைப் பொறுத்தவரையில் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தது. அதாவது முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடனும் அடுத்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனும் தோல்வியைச் சந்தித்தது. அதற்கு காரணம் மும்பை அணியின் அனுபவமில்லாத பந்து வீச்சு என கூறப்பட்டது. முதல் போட்டியில் களமிறக்கப்பட்ட ஆர்ச்சர் அதன் பின்னர் வெளியில் அமரவைக்கப்பட்டுள்ளார். ஆனால், மிகவும் இளம் படையை வைத்துள்ள மும்பை அணி அதன் பின்னர் தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றது. அதாவது டெல்லி, கொல்கத்தா, மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது. இதில் ஒரு போட்டி மட்டும் அதாவது கொல்கத்தா அண்இக்கு எதிரான போட்டியில் மட்டும் வான்கடேவில் நடைபெற்றது. இது மும்பை அணிக்கு மிகவும் நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இருக்கும்.


அதேபோல் பஞ்சாப் அணி தனது கடைசி போட்டியில் பெங்களூரு அணியிடம் தோல்வியைச் சந்தித்தது. ஆனால், பஞ்சாப்பின் கடைசி இரண்டு போட்டிகளிலும் சாம் கரன் கேப்டனாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.