பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சிம்பு,எனக்கு படத்துலேயும், வாழ்க்கையிலேயும் ஜோடி இல்லை என சொன்னது சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.  


சிம்புவின் “பத்து தல”


 சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “பத்து தல”.  இந்த படத்தில் நடிகர் சிலம்பரசன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், இயக்குநர் கௌதம் மேனன், கலையரசன்  உட்பட பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் மார்ச் 30 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. ஏற்கனவே பத்து தல படத்தில் இருந்து இரண்டு பாடல்கள், டீசர் எல்லாமே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. 


எனக்கு ஜோடி இல்லை 


”இந்த படத்துல எனக்கு ஜோடி இல்லை. வாழ்க்கையிலேயும் ஜோடி இல்லை. அது எனக்கு பிரச்சினையுமில்லை. தம் படத்துக்கு அப்புறம் கிருஷ்ணாவுடன் ஒரு பண்ண வேண்டியது. ஆனால் அப்ப நடக்கல. இவ்வளவு வருஷம் கழிச்சி நடந்துருக்கு. ஏ.ஆர்.ரஹ்மான் என்னுடைய காட்ஃபாதர். அவருக்கு என் மேல் என்ன அன்பு என தெரியவில்லை. அதை நான் கெடுத்து விட மாட்டேன். கிட்டதட்ட 50 படம் நடிச்சி முடிச்சிட்டேன். இதுவரைக்கு ஆடியோ நிகழ்ச்சிக்கு என்னோட பெற்றோர் வந்தது இல்ல. இன்னைக்கு தான் முதல்முறையா வந்துருக்காங்க. 


முன்னாடில்லாம் ஃபயரா பேசுவீங்க. இப்பெல்லாம் சாஃப்டா பேசுறீங்க என நிறைய பேர் கேட்டாங்க. அதை நான் ஒத்துக்கிறேன். அப்படி பேசுறப்ப நிறைய பேர் யோசிச்சிருப்பீங்க. நான் கஷ்டத்துல இருந்தேன். சினிமாவில் நான் இருக்க மாட்டேன் என சொன்னார்கள். பிறந்ததில் இருந்தே நடிச்சிட்டு இருக்கேன். உள்ளே, வெளியே என இரண்டு இடங்களிலும் பிரச்சினை. இறைவனை நோக்கி போனேன். எனக்கு கஷ்டத்துல இருக்கும்போது நான் தான் எனக்கு துணையாக இருக்க முடியும். என் ரசிகரை தவிர யார் எனக்கு துணை இருந்தார்கள்? 


எனக்குள்ள ஒரு தன்னம்பிக்கை இருந்தது. கிட்டதட்ட 39 கிலோ குறைச்சேன். மாநாடு படம் வெளியானப்பின் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்து மக்கள், ரசிகர்கள் என்னுடைய கண்ணீரை துடைச்சி விட்டீங்க. இன்னைக்கு இவ்வளவு தூரம் கொண்டு வந்து விட்டுருக்கீங்க. அப்புறம் எப்படி ஃபயரா பேச முடியும். பணிஞ்சு தான் பேச முடியும். இனிமேல் பெருசா பேசுறதுக்கெல்லாம் ஒன்னுமே இல்லை. செயல் மட்டும் தான்.


ஒவ்வொரு நாளும் நம்மை நாம் மாற்றி தான் ஆக வேண்டும். என்னுடைய ரசிகர்களுக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. எனக்காக எவ்வளவு பண்ணிருக்கீங்க. எனக்கு முட்டுக்கொடுத்து என்னோட தலைவன் வருவான் வருவான்னு சொன்னது. இனிமேல் நீங்க சந்தோசமா இருங்க. மத்ததெல்லாம் நான் பார்த்துக்கிறேன். சமூக வலைத்தளத்தில் கூட எதுவும் பண்ன வேண்டாம். நான் என்ன பண்றேன்னு மட்டும் பாருங்க. ஏன்னா.. நான் வேற மாதிரி வந்துருக்கேன். ரசிகர்களாகிய உங்களை தலைகுனிய விட மாட்டேன். தமிழ் சினிமா பெருமைப்படும்படி நான் நடந்துப்பேன்” என சிம்பு கூறியுள்ளார்.