நடிகர் சிம்புவின் அடுத்த படமான பத்து தல திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை பிரம்மாண்டமாக நடைபெற்றது.
கன்னட படமான முஃப்தி படத்தின் ரீமேக்கான இந்தப் படத்தில் சிம்புவுடன் பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கௌதம் வாசுதேவ் மேனன், டீஜே, அனு சித்தாரா, கலையரசன் உள்ளிட்ட பலர்- இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது, ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
பெற்றோருடன் வருகை
நேற்று மாலை தொடங்கி இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்ற நிலையில், நடிகர் சிம்பு இந்த விழாவுக்கு தன் பெற்றோர் டி.ராஜேந்தர் - உஷா ஆகியோருடன் வருகை தந்திருந்தார்.
மேலும் தன் புது லுக்கில் காளை பட ஹேர்ஸ்டைலில் வருகை தந்திருந்த சிம்பு, இசை வெளியீட்டு விழாவில் நடனமாடியும், பாடியும் தன் ரசிகர்களை மகிழ்வித்தார்.
பாட்டு, நடனம்
முதலில் நடன அமைப்பாளர் சாண்டி சிம்பு இசையமைத்துப் பாடிய லவ் ஆந்தம் பாடலுக்கு பெர்ஃபார்ம் செய்த நிலையில், மேடையை விட்டு கீழிறங்கி நடிகர் சிம்புவையும் இந்தப் பாடலுக்கு ஆட வைத்தார். இது அங்கிருந்த சிம்பு ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.
அதேபோல், விழா முடியும்போது தன் பேச்சை முடித்துவிட்டு, தன் ரசிகர்களுக்காக எனக் கூறி வல்லவன் படத்தில் இடம்பெற்ற லூசுப் பெண்ணே பாடலை பாடத் தொடங்கினார். தொடர்ந்து அந்த்ப் பாடலுக்கு மேடையில் நடனமாடியும் மூன் வாக் செய்தும் தன் ரசிகர்க்ளை உற்சாகப்படுத்தினார்.
வழக்கத்துக்கு மாறாக இசை வெளியீட்டு விழாவில் சிம்புவின் இந்த பெர்ஃபாமன்ஸ் அவரது ரசிகர்களைக் கவர்ந்து லைக்ஸ் அள்ளி வருகிறது.
’கௌதம் கார்த்திக்குக்காக நடித்தேன்’
முன்னதாக இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சிம்பு, “இந்தப் படம் தொடங்கியபோது கஷ்டமான சூழலில் இருந்தேன். நான் வீட்டுக்குள்ளேயே இருப்பதாக அப்போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறினார். ஒரு மனுஷன் வீட்டில் இருந்தாலும் பிரச்சினையா என கவலைப் பட்டேன். அதன்பின் கொஞ்ச நாள் கழித்து இந்தப் படம் பண்ண கேட்டார். கன்னட படத்தோட ரீமேக் இந்தப் படம் எனக் கூறினார்கள்.
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடித்த பாத்திரத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லிட்டேன். ஆனால் இந்தப்படத்தில் இப்போது நடித்துள்ளதற்கு முக்கியக் காரணம் கௌதம் கார்த்திக். எனக்கு படம் பிடித்திருந்தால் சிறிய படம் பெரிய படம் என்றெல்லாம் பார்க்காமல் அந்தப் படத்தில் நடித்தவர்களை கூப்பிட்டு பாராட்டுவேன். ஏனென்றால் இங்கு தட்டி விடுவதற்கு நிறைய பேர் உள்ளார்கள். தட்டிக் கொடுக்கதான் யாருமே இல்லை. ஆனால் என்னைத் தட்டிக் கொடுக்க என் ரசிகர்கள் உள்ளனர்.
இந்தப் படம் எனக்கு வெற்றியாக இருக்குமோ இல்லையோ, கௌதம் கார்த்திக்குக்கு வெற்றியாக அமையும். அவருக்காக மட்டுமே இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என நினைத்தேன்” என்று நடிகர் சிம்பு பேசிமுடித்தார்.