பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சிம்பு, நமக்கு பிரச்சினை பண்றதுக்குன்னே நிறைய பேரு இருக்காங்க” என தெரிவித்த கருத்து  சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. 


சிம்புவின் “பத்து தல”


 சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “பத்து தல”.  இந்த படத்தில் நடிகர் சிலம்பரசன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், இயக்குநர் கௌதம் மேனன், கலையரசன்  உட்பட பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் மார்ச் 30 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. ஏற்கனவே பத்து தல படத்தில் இருந்து இரண்டு பாடல்கள், டீசர் எல்லாமே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. 


அனல் பறந்த பேச்சு 


பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.இதற்கு வருகை தந்த சிம்புவின் நியூ லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய சிம்பு, நிறைய சம்பவங்களை நினைவுக் கூர்ந்தார். அதன்படி, “பத்து தல படத்தின் போது சில பிரச்சினைகள் இருந்தது. நானும் உடல் எடை அதிகமாக இருந்தேன். இந்த கேரக்டருக்கு சரியாக இருந்தது. ஆனால் அதன்பிறகு அப்படியே எடை குறைந்து மாநாடு பண்ணினேன். திரும்ப பத்து தல படம் பண்ண வேண்டிய சூழல். நான் ஞானவேல் ராஜாவிடம் பணத்தை திரும்ப கொடுத்து விட்டு நடிக்க வேணாம் என சென்று இருக்கலாம். ஆனால் நான் கௌதம் கார்த்திக்காக மட்டும் இந்த படத்தை முடித்து கொடுக்க நினைத்தேன். அப்போது இயக்குநர் கிருஷ்ணா நீங்க ஒல்லியா இருக்கீங்க. குண்டா இருந்தா நல்லாருக்கும் என சொன்னார். 


நான் உடனே கிருஷ்ணாவிடம், உனக்கு மனசாட்சியே இல்லையா. ஒவ்வொரு கிலோவும் கஷ்டப்பாட்டு குறைச்சிருக்கேன். உடனே எழுதியிருவாங்க.சிம்பு வெயிட் போட்டாரு. இனிமே ஷூட்டிங் வரமாட்டாருன்னு சொல்லிருவாங்க. நம்மளுக்கு பிரச்சினை பண்றதுக்குன்னே நிறைய பேரு இருக்காங்க. நானே இப்பதான் எல்லாத்தையும் சரி பண்ணி வந்துருக்கேன். உடனே நான் இனிமேல் வெயிட் போடுறது கஷ்டம்.  ஒரு போட்டோஷூட் எடுங்க. சரியா வரலைன்னா பாத்துக்கலாம்ன்னு சொல்லிட்டேன். 


அப்புறம் ஒரு போட்டோ நான் சேர்ல திரும்பி உட்கார்ந்து இருக்குற மாதிரி எடுத்தோம். அந்த போட்டோவோட முன்பக்கத்தை ஏன் காட்டலை தெரியுமா? . ஸ்கூல் படிக்குற பையன் சேர்ல உட்கார்ந்த மாதிரி இருந்தேன். நானே பார்த்துட்டு என்னடா இது சுத்தமா வேலைக்கே ஆகலப் போலன்னு நினைச்சேன். 108 கிலோ இருந்ததை குறைச்ச உன்னால திரும்பவும் வெயிட் போட்டு குறைக்க முடியாதா என ரசிகர்களையும் நினைத்து இந்த படத்துல நடிக்கிறேன்னு சொன்னேன். அந்த வெள்ளை தாடி, கொஞ்சம் வெயிட் போட்டபடி இருக்கும் அந்த கேரக்டர் என்னோட வயசுக்கும் ஒருபடி மேல தான் இருக்கும்”  என சிம்பு  தெரிவித்துள்ளார்.