TN Budget 2023 Expectations: தமிழக அரசின் 2023-24 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நாளை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பொதுமக்கள் எதிர்பார்ப்பது என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். 


காலிப்பணியிடங்களை நிரப்ப இளைஞர்கள் கோரிக்கை:


தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில் ”பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும். மகளிருக்கு சமையல் கியாஸ் மானியமாக ரூ.400 வழங்க வேண்டும்.  அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும்” என இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்குக - விவசாயிகள்:


விவசாய விளை பொருட்களுக்கு வரி விதிக்க கூடாது. 60 வயது முடிவடைந்த சிறு, குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். விவசாயிகளின் நலன் கருதி தமிழ்நாட்டில் இயங்காத தனியார் சர்க்கரை ஆலைகளை பொதுத்துறை ஆலைகளாக மாற்றி அரசே நடத்த வேண்டும்.


கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரமும், நெல் குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரத்து 500-ம் வழங்க வேண்டும். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மழை, வெயில் காலங்களில் நெல் மூட்டைகள் சேதம் அடைவதை தடுக்க மேற்கூரைகள் அமைத்து தர வேண்டும். நீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள் மற்றும் நீர் வரத்து வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு தனியாக நிதி ஒதுக்க வேண்டும். உர மானியம் வழங்க வேண்டும்” என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் - அரசு அதிகாரிகள்:


அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதோடு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு போராட்டங்களை அறிவித்துள்ளது. அவர்களை சமாதானப்படுத்தவும் அரசு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


புதிய பாடத்திட்டம் - கல்வியாளர்கள்


”காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். அனைத்து கிராமங்களிலும் நூலக வசதி செய்து தர வேண்டும். தாய்மொழி வளர்ச்சிக்கு இலக்கணம் அவசியம். எனவே 6 முதல் 12 வகுப்புகள் வரை படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் பாட நூலுடன் தனி இலக்கண புத்தகம் வழங்கப்பட வேண்டும். இதேபோல் ஆங்கில பாடத்திற்கும் தனி இலக்கண புத்தகம் வழங்கப்பட வேண்டும். சாலை பாதுகாப்பு விதிகள், சுகாதார விழிப்புணர்வு, தொல்லியல் சின்னங்கள் பாதுகாப்பு குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சமூக நீதியை பாதுகாக்க இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடுகள் வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.


ரூ.1000 உரிமைத்தொகை வழங்க வேண்டும் - குடும்பத்தலைவிகள்


குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு ஏற்படும் பட்சத்தில் மக்களுக்கு மானியம் வழங்கி அரசு விலை உயர்வை ஈடுசெய்ய வேண்டும்” என குடும்பத்தலைவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மின் கட்டணம் உயர்வு வேண்டாம் - தொழில்துறையினர் கோரிக்கை


”மின் கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்தாலே இந்த பட்ஜெட் மகிழ்ச்சிகரமான பட்ஜெட்டாக இருக்கும்.  உள்நாட்டு உற்பத்தியில் 2-வது மாநிலமான தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறு, குறு தொழில்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


முடங்கிய தொழில்களை மீட்டு கொண்டு வர தாட்கோ வங்கிகள் மூலம் எளிய முறையில் கடன் வழங்குவதற்கான நடவடிக்கை அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும்..  தமிழகத்தில் கோவைக்கு அடுத்தபடியாக அதிக நகை தொழில் உற்பத்தி செய்யும் நகரமான விழுப்புரத்தில் நகை தொழிலுக்கான சிறப்பு தொழிற்பேட்டை வேண்டும்” என தொழில்துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.